வேலுார் மாவட்டம், கொசவன்புதுார் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி, 45. இவரது கணவர் சந்திரபாபு. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திற்கு இரு தரப்பினரும் பேச்சுக்கு சென்றனர். அதன்பின், பட்டியலின வாலிபர்கள் அமர்ந்த நாற்காலிகளை சந்திரபாபு, ஆகஸ்ட் 28-ல் தீ வைத்து எரித்துள்ளார்.
பட்டியல் சமூகத்தினர் அமர்ந்ததால், கொளுத்துவதாக அவர் பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், பசுமத்துார் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில், கே.வி.குப்பம் போலீசார், வன்கொடுமை சட்டத்தின் கீழ் சந்திரபாபுவை நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை கைது செய்துள்ளனர். பட்டியலின மக்கள் அமர்ந்ததால் நாற்காலிகளை அவர் கொளுத்தவில்லை என்றும், அவரது சமூகத்தை சேர்ந்த சிலர் அமர்ந்ததால் அதை கொளுத்தியுள்ளார் என்றும் போலீசார் கூறியுள்ளனர். தற்போது பட்டியல் சமூகத்தினரை ஆபாசமாக திட்டியதால் தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்றும் போலீசார் கூறியுள்ளார்கள்.
எச்.ராஜா கண்டனம்
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “தீண்டாமை பாவமில்லை எனில் உலகில் வேறு எதுவுமே பாவமில்லை என்றார் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூன்றாவது தலைவரான பரமபூஜனீய ஸ்ரீ பாலசாகேப் தேவரஸ் ஜி அவர்கள்.
மிகக் கொடிய பாவச்செயலான தீண்டாமையை மன்னிக்கவே முடியாது. பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமர்ந்த நாற்காலியை ஒருவர் தீ வைத்து எரிக்கிறார் என்றால் அவருக்குள் எந்த அளவிற்கு தீண்டாமை குணம் இருக்கும் என்பதை அவருடைய கொடுஞ்செயல் நிரூபிக்கிறது. ஆகவே அத்தகைய கொடுஞ்செயலை செய்தவரை கைது செய்ததோடு மட்டும் இல்லாமல் சட்டப்படி அவர் மீது உரிய நீதிமன்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியிருக்கிறார்.
