பண்டிகை காலத்தில் உணவு கலப்படத்தை தடுக்க புதிய உத்தரவு; துக்காராம் முண்டேவின் முக்கிய அறிவிப்பு

-நமது சிறப்பு நிருபர்-

மஹாராஷ்டிர உணவு பாதுகாப்பு துறை ஆணையரான துக்காராம் முண்டே, வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு உணவுக் கலப்படத்தைத் தடுக்கவும், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் புதிய கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றி வருபவர் துக்காராம் முண்டே. இவர் உணவகங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்களில் ரெய்டு நடத்தி, விதிமீறிய உணவகங்கள் பூட்டி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி நேர்மையாக சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் என பாகுபாடு இல்லாமல் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

தற்போது ஈத் முதல் தீபாவளி வரை பண்டிகை காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கையின் பக்கம் துக்காராம் முண்டேவின் கவனம் திரும்பியுள்ளது. அவர் வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு உணவுக் கலப்படத்தைத் தடுக்க புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஈத் முதல் தீபாவளி வரை ஆண்டு முழுவதும் வரும் அனைத்து முக்கிய பண்டிகைகளின் போதும் உணவுக் கலப்படத்தைத் தடுக்க 12 மாத கால திட்டத்தில் பல்வேறு முக்கிய உத்தரவுகள் இடம்பெற்றுள்ளன.

அதன் விபரம் பின்வருமாறு:

* பண்டிகைகளின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் மகாபிரசாதம், பண்டாரா மற்றும் இப்தார் விருந்துகள் போன்ற அனைத்து வகையான பொது உணவு விநியோகங்களுக்கும் இனி முன்பதிவு அல்லது முன்அறிவிப்பு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாகச் சென்று தரம் மற்றும் தூய்மையை ஆய்வு செய்வார்கள்.

* பண்டிகை காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இனிப்புகள், பால் பொருட்கள் (பால், கோவா), சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவற்றின் தரம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

* உரிமம் பெற்ற உணவு தயாரிப்பாளர்கள் மட்டுமே பண்டிகை கால உணவுகளைத் தயாரித்து விநியோகிக்க வேண்டும்.

* கணேஷோத்சவம் மற்றும் நவராத்திரி போன்ற முக்கிய மாநில அளவிலான பண்டிகைக்கு 15 முதல் 21 நாட்களுக்கு முன்பே ஆய்வுகள் துவங்கும்.

* மகாசிவராத்திரி மற்றும் மகர சங்கராந்தி போன்ற மற்ற பண்டிகைக்கு 14 நாட்களுக்கு முன்பு ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.

* உள்ளூர் விழாக்களில் கவனம் செலுத்தும். உணவுப் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க, பேக்கரி, ஸ்வீட்ஸ் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள்.

* கொண்டாட்டங்களுக்குப் பிறகு 30 நாட்களுக்கு, விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும், மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் சோதனை நடத்தப்படும்.

* எண்ணெய், உலர் பழங்கள், பேக்கரி பொருட்கள், ஆன்லைன் ஆர்டர்களில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றைப் பரிசோதிக்கத் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தரமான உணவு

இந்த புதிய உத்தரவு குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் துக்காராம் முண்டே கூறியதாவது: பண்டிகைகளால் தடையின்றி உணவுப் பாதுகாப்பைக் கண்காணிக்க, உணவு பாதுகாப்பு துறை 12 மாத கால திடத்தை அறிவிப்பது நாட்டில் இது முதல் முறையாக நிகழ்கிறது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. ஈத் பண்டிகையாக இருந்தாலும் சரி, தீபாவளியாக இருந்தாலும் சரி, பண்டிகைகளின்போது மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.

கடும் நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் உணவுக்கான தேவை கடுமையாக உயர்கிறது. இதனால் சில சமயங்களில் தரம் குறைந்த உணவு நுகர்வோரைச் சென்றடைய நேரிடலாம். பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது மிகக் குறைந்த அளவில் மக்கள் உட்கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறும் மற்றும் கலப்படத்தில் ஈடுபடும் உணவு நிறுவனங்கள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு துக்காராம் முண்டே கூறினார்.

Source link