பருவ மழை துவங்கும் முன் சாலை பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு

சென்னை: ‘வடகிழக்கு பருவ மழைக்கு முன், குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், சாலை பணிகளை முடிக்க வேண்டும்’ என அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் விஜய் தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையின்போது, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

‘கடந்த பருவ மழை காலங்களில், வெள்ளம் பாதித்த இடங்களில் நடக்கும் பணிகளை, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர், வாரம் இருமுறையாவது ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைகளை களைய, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று, முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

மேலும், ‘நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை அகற்றப்பட வேண்டும். கால்வாய்கள், மழைநீர் வடிகால்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன், நிறைவு பெறாமல் இருக்கும் குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், சாலைப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்’ என, முதல்வர் விஜய் உத்தரவிட்டதாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link