சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ராம்சார் தளமாக அறிவுக்கப்பட்டும் சதுப்பு நிலமாக அறிவிக்கை செய்யாமல் இருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ள பாமக சட்டமன்ற குழு தலைவர் செளமியா அன்புமணி,
சதுப்பு நிலங்களை அறிவிப்பு செய்யாமல் இருப்பதன் பின்னணியில் பல ஆயிரம் கோடியிலான முறைகேடுகள் அரங்கேறி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்
சென்னை கிண்டி – கன்னிகாபுரம் செக் – போஸ்ட் மெயின் ரோட்டில் உள்ள முதன்மை தலைமை
வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் தலைமை வனப் பாதுகாவலர் ராகேஷ் குமார் ஜகானியாவிடம், ராம்சார் சதுப்பு நில விதிகளுக்கு எதிராக , பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சட்டவிரோத நடைபாதை & சுற்றுச்சுவர் கட்டுவது தொடர்பாக, பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி புகார் மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சௌமியா அன்புமணி,” தமிழ்நாடு ஈரநில அலுவலகத்தில் 14 பக்க கோரிக்கை மனுவை வழங்கியுள்ளோம். பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அறிவிக்கை செய்ய வலியுறுத்தி உள்ளோம்.
ஒரு வீட்டிற்கு குடிநீர் , கழிவு நீர் வெளியேற்ற அமைப்பு அவசியம் , ஒரு ஊர் அமையவும் அது முக்கியம். சென்னையில் அடையாறு கூவம் கொசஸ்தலை என 3 ஆறுகள் உள்ளன. சென்னை ஆறுகளில் நீர் வரத்துக்கு மழைநீர் மட்டுமே ஆதாரமாக உள்ளது. கோவிலம்பாக்கம் , மடிப்பாக்கம் , தாம்பரம் என பல இடங்களில ஏரிகள் உள்ளன. அவை நிரம்பியவுடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் செல்கின்றன. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 12 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரம் ஏக்கராக சுருங்கிவிட்டது.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் மழை வெள்ள நீரை உறிஞ்சுவதில் முக்கியத்துவம் வாய்ந்தது. பல அரசு அலுவலகங்கள் ஏரி குளங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் வெள்ளம் ஒக்கியம் மடுகு வழியே மட்டுமே வழிய முடியும். வேறு எந்த பகுதி கடற்பகுதியில் சென்னை வெள்ளம் சென்றடைய முடியாது. பக்கிங்காம் கால்வாயும் , பள்ளிக்கரணையும் வெள்ள நீர் வடிவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
உச்ச நீதிமன்றம் இருமுறை கூறியும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சதுப்புநிலமாக அறிவிக்கை செய்யாதது ஏன்? ராம்சார் தளமாக அறிவுக்கப்பட்டும் சதுப்புநிலமாக அறிவிக்கை செய்யாமல் இருப்பது ஏன்? பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை டிஜிட்டல் முறையில் வரையறுத்து அறிவிக்க வேண்டும். உலக வங்கியின் 1200 கோடி நிதியில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 21 கோடியில் சுற்றுச்சுவர் கட்டுகின்றனர். 65 நீர்நிலைகள் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் தாக்கம் உள்ள பகுதியாக உள்ளது : அவற்றை காக்க சதுப்புநிலமாக அறிவிப்பு செய்வது அவசியம்
மாசுபாட்டு தொழிற்சாலைகளை தவிர்த்து பிற தொழிற்சாலை களை சதுப்பு நிலத்தை சுற்றி அமைக்க அனுமதி உண்டு. 26800 சதுப்பு நிலங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன , அவை அனைத்தையும் வரையறுத்து அறிவிப்பு செய்ய அறிவுறுத்தி உள்ளோம். 8 ஆண்டுகளாக செய்திருக்க வேண்டிய அந்த வேலைகளை செய்யாமல் விட்டுள்ளனர். சதுப்பு நிலங்களை அறிவிப்பு செய்யாமல் இருப்பதன் பின்னணியில் பல ஆயிரம் கோடியிலான முறைகேடுகள் அரங்கேறி வருகிறது.
மழைநீர் சேகரிப்பு முக்கியமான திட்டம் , அனைத்து கட்டிடங்களிலும் அது அவசியம் . அதற்கான சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். மேலும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை முறைப்படி தடை செய்ய வேண்டும். 10 அடி ஆழம் கொண்டமாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைய வேண்டும். பெரிய கட்டுமான நிறுவனங்கள் அவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பது நமது உயிருக்கு சமமாக கருத வேண்டும்” என்றார்.
