ரஜினி பட ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்க விருப்பம்!

சென்னையில் கடந்த 25ஆம் தேதி செய்தி வாசிப்பாளர் சங்க விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நெகட்டிவ் கமென்ட்ஸுகளை பார்ப்பதோ, படிப்பதோ இல்லை. என் சோஷியல் மீடியா பணிகளை என் டீம் பார்க்கிறது. இப்போது ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்து 2 பட ஸ்கிரிப்ட் வொர்க் நடந்துக்கொண்டு இருக்கிறது. இதைத்தவிர, என் தயாரிப்பில் 3 படங்கள் உருவாகிறது. ஆக தற்போது 7 கதைகள் மனதிற்குள் இருக்கிறது.

வீட்டுக்கு, குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும். சோஷியல் மீடியாவில் கவனம் செலுத்தினால் குழந்தைகளுடன் விளையாட முடியாது. மேலும் படத்துக்கு உடல் அளவில் தயாராக நேரம் ஒதுக்க வேண்டும். நம்மை நம்பி காசு போடுகின்ற தயாரிப்பாளருக்கு வேலை பார்க்க வேண்டும். அவ்வப்போது ரசிகர்களை சந்திக்க வேண்டும். இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும்போது, முகம் தெரியாத ஒருவர் போடுகின்ற நெகட்டிவ் கமென்ட் என்னை பாதிக்காது” என்றார். 

பின்பு ரீமேக் படம் நடித்தால் எந்த படத்தில் நடிக்க ஆசை எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் இதுவரை ரீமேக் படங்கள் நடித்ததில்லை. ஆனால் ஆசைகள் முன்பு இருந்திருக்கிறது. காலேஜ் படிக்கும் சமயத்தில் ரஜினி சார் நடித்த ‘தில்லு முல்லு’ படத்தை அதிகம் திரும்ப திரும்ப பார்ப்பேன். இது போல ஒரு படம் பண்ணால் நல்லாருக்கும் என நினைத்திருக்கிறேன். ஆனால் அந்த படம் பின்பு ரீமேக் ஆகிவிட்டது. அதன் பிறகு எந்த படமும் தோன்றியதில்லை. நீங்கள் கேட்பதால் யோசித்து ஒரு படம் சொல்கிறேன். அண்ணாமலை. அந்த படம் பண்ணால் நல்லாருக்கும் என தோன்றுகிறது” என்றார். 

 சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, சரத் பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான படம் ‘அண்ணாமலை’. கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் 1987-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘குத்கர்ஜ்’ என்ற படத்தின் ரீமேக் என ஒரு தகவல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.