பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முன்முயற்சி; மனமாரப் பாராட்டிய இயக்குநர் சீனு ராமசாமி

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், ஆட்டிசம் (மன இறுக்கம்) பாதிப்புள்ள 40 குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்காக முதன்முறையாகச் சிறப்பு ‘உலக சினிமா’ திரையிடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அக்குழந்தைகளின் கவனிக்கும் திறன் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த முக்கிய முன்முயற்சியைப் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து  பாராட்டுகள் குவிந்தது வருகின்றன.  

அந்த வகையில், பிரபல இயக்குநர் சீனுராமசாமி இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ” மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு என் இதயப் பூர்வமான நன்றிகள்.

ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, ‘உலக சினிமா’ என்ற பிரபஞ்சத்தின் ஜன்னலைத் திறந்து வைத்திருக்கிறீர்கள்.  இந்தச் சிறப்பான முன்னெடுப்பிற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

உலக சினிமா என்பது திரையில் ஓடும் வாழ்வின் கண்ணாடி, மானுடத்தின் பாடம். உலக சினிமா ரசனைக் கல்வி என்பது பாடத்திட்டமாக மட்டுமல்லாமல்,  நம் கல்வி முறையில் ஒரு பண்பாடாகவே வேரூன்ற வேண்டும் எனத் தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் திட்டத்தை அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி, உலக சினிமா ரசனைக் கல்வியைத் தாங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உலக சினிமா வழியாக மாணவர்களின் படைப்பாற்றல், உலகளாவிய பார்வை மற்றும் பன்முகத்தன்மையைச் செதுக்கும் இந்த மகத்தான முன்னெடுப்பு, நம் கல்வி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும். உங்கள் அர்ப்பணிப்புக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.  

Source link