தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மழையின் தீவிரம் அதிகரித்த பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக, கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, தேனி, நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அந்தந்த கலெக்டர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தரப்பினர் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே சமயத்தில் விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் நெல்லை இல்லை. இதனால் மனம் வருந்திய குறு(சு)ம்பு மாணவர்களில் சிலர், தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் கலெக்டருக்கு மெசேஜ்களை அனுப்பி இருக்கின்றனர். அதில், மழைக்கு லீவு தராததால் நீங்கள் மனிதனாகவும், ஆட்சியராகவும் தோற்றுவிட்டீர்கள் என்று பதிவிட்டு இருந்தனர்.
மாணவர்களின் மனோநிலையை உணர்ந்த கலெக்டர் ஆனந்த் மோகன், அவர்களின் மெசேஜ்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த மெசேஜ்களை ‘ரெயின் பரிதாபங்கள்’ என்றும் அவர் மேற்கோள் காட்டி உள்ளார்.
இதேபோன்று,கன்னியாகுமரி கலெக்டர் பிரதாப் முருகனும், மாணவர்களின் ஜாலியான மெசேஜ்களை ரெய்னி டேய்ஸ் பரிதாபங்கள் (Rainy Days Paridhabangal) என்ற தலைப்பில் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
