பழநி நில விவகாரத்தில் திடீர் திருப்பம்: 1882-ஆம் ஆண்டு அசல் ஆவணங்களுடன் வந்த வாரிசுதாரர்கள்!

பழநி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான நில மோசடி வழக்கு தொடர்பாக, 1880-ஆம் ஆண்டின் நில உரிமையாளர் எனக் கூறப்படும் குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்கள் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

​இவ்வழக்கு தொடர்பாக, குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்களான சுந்தரி, அவரது மகன் விஷ்ணு சுதர்சன் மற்றும் மகள் ஜெயலட்சுமி ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரின் உத்தரவின் பேரில் ஆஜராகினர்.

அப்போது, தங்களது வசமிருந்த நிலம் தொடர்பான அசல் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை அவர்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். ​இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்.பி ஷாஜிதா அவர்களிடம் விசாரணை  நடத்தினார். இந்த விசாரணையின் போது, வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனையும் உடன் வைத்து வாரிசுதாரர்களிடம் சிபிசிஐடி போலீஸார் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பின், வாரிசுதாரர்களின் வழக்கறிஞர் கண்ணகி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, ​”சுந்தரி முருகன் என்பவரை ‘பழநி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்து’ என்று கூறி விசாரணைக்கு அழைத்திருந்தனர்.  அந்தச் சொத்தின் அசல் பத்திரத்தின் உண்மையான உரிமையாளர்கள் அவர்கள் தான் என்பதற்கான ஆவணங்களை இன்று நாங்கள் கொண்டு வந்து சமர்ப்பித்துள்ளோம்.

எங்களை விசாரித்து வாக்குமூலமும் பெற்றுள்ளனர். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். எங்களுக்கு சாதகமாக உள்ள அனைத்து ஆவணங்களையும் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளோம்.

இதற்குப் பிறகு, நாங்கள் நீதிமன்றத்தை நாடி, நாங்கள்தான் உண்மையான உரிமையாளர்கள் என்பதை நிரூபித்து எங்களது சொத்தை மீட்டெடுப்போம்” என்றார்

தொடர்ந்து சுந்தரியின் வழக்கறிஞர் கார்த்திகேயன் பேசும்போது, “நான் சுந்தர்யின் தம்பி. 1882, 1888-ஆம் ஆண்டுகளில் குப்புசாமி மணியக்காரர் எழுதிக் கொடுத்த ஒரிஜினல் பத்திரங்கள் இவையெல்லாம். அவர் அக்காவோட மாமனாரோட தாத்தா. அவர் இந்த சொத்துகளை எல்லாம்   ஒரு தனியார் மடத்துக்கு தான் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

அதன் பிறகு அது சம்பந்தமான ஒரிஜினல் பத்திரங்கள் எல்லாம் இவர்களிடம் தான்  இருந்தது. எல்லாவற்றையும் கொண்டுவந்து சமர்ப்பித்துள்ளோம். இது சம்பந்தமாக சமீபத்தில் சென்ற வருடம்  நீதிமன்றத்தில் தீர்ப்பும் வந்துள்ளது.​ இது சரியான முறையில தர்ம சாஸ்திரப்படி கொடுத்தது.

ஒரு தனியார் மடத்துக்கு என்ன நோக்கத்திற்காக கொடுத்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறவில்லையென்றால் அந்த சொத்து உரிமையாளர்களுக்கே மீண்டும் வந்து விட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

நாங்கள் 1882, 1888-ஆம் ஆண்டின் ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் கொண்டுவந்து சமர்ப்பித்து உள்ளோம். அதற்கான விவரங்களை வாங்கி கொண்டு சாட்சியத்துக்கு கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.

பழனி
பழனி

அடுத்த கட்ட நடவடிக்கை நீதிமன்றம் தான். எங்கள் நோக்கம், இந்த சொத்தை மீண்டும் வேண்டும் என்று கேட்கவில்லை. இது திருப்பி தர்ம காரியத்துக்கு சரியான முறையில் போக வேண்டும்.

இதுல இந்து சமய அறநிலையத் துறைக்கு (HR & CE) உண்மையிலேயே உரிமை இல்லை.  இது தனியார் மடத்துக்கு கொடுத்தது. ஆனால் அவர் அதை முறையான காரியத்துக்கு உபயோகப்படுத்தவில்லை. 

அதை இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தம் என நினைக்கிறார்கள். அதை  நீதிமன்றத்தில் தான் முடிவு செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.

இந்த சொத்தை எந்த நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டதோ அதற்காக பயன்படுத்த வேண்டும். இதை சொல்ல வந்திருகக்கிறோம்” என தெரிவித்தார்.

Source link