– நமது நிருபர்-
இடுக்கி மாவட்டம் கட்டப்பனாவை சேர்ந்த கேரள அரசு பஸ் டிரைவரான பால் குரியன், பணி ஓய்வு பெறும் நாளன்று, 18 ஆண்டுகளாக தான் ஓட்டிய பஸ்சை தொட்டு வணங்கி முத்தமிட்ட காட்சி இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனாவை சேர்ந்தவர் பால் குரியன். கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றினார். இன்றுடன்( செப்.,02) அவர் பணி ஓய்வு பெற்றார். கடைசி நாளான இன்று, அவர் பணி ஓய்வு பெறும் போது பஸ்சில் இருந்து இறங்கிய அவர், 18 ஆண்டுகளாக தான் ஓட்டிய அந்த பஸ்சை சுற்றி வந்து நான்கு பக்கங்களில் உள்ள டயர்களை தொட்டு கும்பிட்டார். பின்னர் அந்த பஸ் முன்பக்கம் மீது ஓரிரு நொடிகள் சாய்ந்து இருந்த நிலையில், பிறகு முத்தம் கொடுத்து தனது பணியை நிறைவு செய்தார்.
தன் வேலை மீதும், இத்தனை நாள் தனக்கு வேலை கொடுத்த பஸ் மீதும் கொண்டிருந்த மரியாதையை அவர் வெளிப்படுத்திய விதம் அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
