பாகிஸ்தானை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிரிக்ஸ்.. “ஜீரோ சகிப்புத்தன்மை..” காட்டமான எச்சரிக்கை

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் நடந்தாலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகளை இருக்கவே கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. பைசரன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். பிரிக்ஸ் மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்ட 140 அம்சங்களைக் கொண்ட நியூ டெல்லி பிரகடனத்தின் 40வது பாயிண்டில் பயங்கரவாதம் தொடர்பான நிலைப்பாடும் மிக தெளிவாக இடம் பெற்றுள்ளது. அதில், “எந்த நோக்கத்துடன் அல்லது யாரால் நடத்தப்பட்டாலும், அனைத்து பயங்கரவாத செயல்களும் குற்றம் தான். அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை.

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை மிக கடுமையாக கண்டிக்கிறோம். இதில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் பிரிக்ஸ் பிரகடனத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட நாட்டின் பெயரும் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக, எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் நடமாட்டம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடங்கள் வழங்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை எந்தவொரு மதம், தேசியம், நாகரிகம் அல்லது இனக்குழுவுடனும் தொடர்புப்படுத்தக் கூடாது என்றும் பிரிக்ஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பிரிக்ஸ் நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஜீரோ சகிப்புத்தன்மை என்ற கொள்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகளை நிராகரிக்க வேண்டும் என்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதம் அதிகரிப்பதை தடுப்பதன் முக்கியத்துவத்தையும் பிரிக்ஸ் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் கண்டனம் தெரிவித்திருந்தன. அப்போது வெளியிடப்பட்ட ரியோ பிரகடனத்திலும் தாக்குதலை கண்டித்ததுடன், அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டிலும் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.