பாஜகவிற்கு பதவியை விட நாடும், இளைஞர்களுமே முக்கியமானவர்கள்: அமித்ஷா

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த ராஜினாமா குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

பாஜகவிற்கு நாடும், இளைஞர்களுமே முக்கியம்:

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை எந்தவொரு பதவியையும் விட நாடும், நமது இளைஞர்களும், மாணவர்களுமே முக்கியமானவர்கள்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, இந்த கொள்கைக்கு சிறந்த உதாரணமாகும்.

மோடி அரசு, இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மோடி எடுத்துள்ள முடிவுகள் பாராட்டுக்குரியவை.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் முழுமையான நீதியை உறுதி செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தர்மேந்திர பிரதான் செய்த சீர்திருத்தங்கள்:

தர்மேந்திர பிரதான் தனது பதவிக்காலத்தில், தேசியக் கல்விக் கொள்கையை திறம்படச் செயல்படுத்துதல், தாய்மொழியில் தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள், பிஎம் ஸ்ரீ பள்ளிகளின் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டார்.

மேலும் டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அவர் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

தேர்வு முறை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மாணவர் நலனை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான அவரது முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை.

இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் லட்சியத்தின் மீதான அவரது அர்ப்பணிப்புக்கு, அவரது பதவிக்காலம் ஒரு சான்றாகத் திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link