“பாடத்திட்டத்தில் பாதுகாப்பு பயிற்சிகள் சேர்க்கப்படும்” – அமைச்சர் ராஜ் மோகன் தகவல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த 8 மாணவர்கள் நேற்று முன்தினம் (04.09.2026) காரில் கேரளம் மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில், இரவு 11.50 மணியளவில் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் கிராமம், பனம்பிக்குன்னு என்ற இடத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் எட்டு மாணவர்களும் உயிரிழந்தனர். 

இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் விபத்திற்கு முன் வெளியிட்ட வீடியோ பதிவை மேற்கோள்காட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தக் சாலை விபத்து குறித்த செய்தி வேதனை தருகிறது. சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்பது மிக அடிப்படையான உரிமையும் கடமையும் ஆகும். எனவே சாலை பாதுகாப்பு, மின் பாதுகாப்பு, நீர்நிலைகளில் பாதுகாப்பு, முதலுதவி போன்ற அத்தியாவசிய வாழ்வியல் திறன்களைப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டாயமாகக் கற்றுக்கொடுக்கும் வகையில் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பாடத்திட்டத்தில் பாதுகாப்பு பயிற்சிகள் சேர்க்கப்படும். 

எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பை மனதில் கொண்டு, இத்தகைய வாழ்வியல் பாதுகாப்புத் திறன்களை மாணவர்களிடம் சிறு வயதிலிருந்தே கொண்டு சேர்க்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு, மிகுந்த கவனத்துடன் செயல்படுத்தப்படும். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link