“பாரதி வரலைனா மேடைக்கே வரமாட்டேன்னு சொன்னவர்”: சாலமன் பாப்பையா நினைவுகளால் கதறி அழுத பாரதி பாஸ்கர்

பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் மறைவுத் தகவலையறிந்து பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்த பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், அவருடைய அளப்பரிய அன்பையும் நினைவுகளையும் பகிர்ந்து நேரலையில் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அதேபோல, “என் தந்தையை இழந்துவிட்டேன்” எனப் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவும் நா தழுதழுக்கத் தன் இரங்கலைப் பதிவு செய்துள்ளார்

தமிழறிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் இலக்கிய உலகையும் பட்டிமன்ற ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.  .

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் மறைவை அறிந்து பெரும் அதிர்சியும் பெருந்துயரமும் அடைந்த பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கதறி அழுதது அனைவரின் மனதையும் கண்ணீரில் கரையச் செய்துள்ளது. சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் தொலைபேசி வழியாகப் பேசிய பாரதி பாஸ்கர் கதறி அழுதபடியே கூறியதாவது: “எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. எனக்கு உடல்நலக் குறைவு வந்தபோது பாரதி மேடைக்கு வரலைனா நான் மேடைக்கு வரமாட்டேன்னு சொன்னாரு.அவருடைய அந்த அன்பை நான் இனி எங்க பார்ப்பேன். அதே மாதிரி அவர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்.  நாங்கள் புகழ் அடைவதைப் பார்த்து அவ்வளவு பெருமைப்பட்டார், சந்தோஷப்பட்டார். அவருடைய பெருந்தன்மை மலை மாதிரி. 

எல்லா சமயமும் ஒன்று என்பதைத்தான் வாழ்நாள் முழுக்க தன்னுடைய செய்தியாக வைத்தார். ஒரு கடவுள்தான், ஒன்று பரம்பொருள். நாம் அதன் மக்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இனி அந்த இடத்துக்கு யார் வர முடியும். அவருக்கு முன்பும் யாரும் கிடையாது. அவருக்கு பின்பும் யாரும் கிடையாது. தமிழ் இலக்கியத்துக்கும் பட்டிமன்றத்துக்கும் அவர் செய்ததை யாராலும் செய்ய முடியாது. நடுவர், நடுவர்னு நாக்கள் அவரைத்தான் சொல்லுவோம். அவருடைய இடம் வெற்றிடமாகப் போச்சு. அவருடைய ஆன்மா எங்களை என்றைக்கு ஆசீர்வதிக்கும் என்று நான் நினைக்கிறேன். எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. இந்த இழப்புல இருந்து நான் எப்படி மீண்டு வரப்போறேன்னு தெரியல” என்று பாரதி பாஸ்கர் கதறி அழுதபடியே கூறினார்.

அதே போல, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா-வின் மறைவுச் செய்தியைக் கேட்டு அவருடைய பட்டிமன்றக்குழுவின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா  மிகுந்த துயரத்துடன் கண்ணர் மல்க நா தழுதழுக்க தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். சாலமன் பாப்பையா மறைவு குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சி நேரலையில் தொலைபேசி வழியாகப் பேசிய பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, “என்னுடைய வாழ்க்கையே அவருடைய தயவிலும் கருணையிலும்தான் வந்தது. நான் சின்ன பையனா, ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கிற காலத்திலேயே நான் அவருடைய வீட்டில் போய் உக்கார்ந்து, புத்தகங்களை வாசிப்பேன். எனக்கு புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடித்து எனக்கு வாசிக்க நிறைய புத்தகங்களை கொடுத்தார். இன்னும் சொல்லனும்னா, என்னுடைய பி.யூ.சி படிப்புக்கு ஃபீஸ் கட்டியதே அவர்தான். அன்றைக்கு தேடிக்கு கையில் காசு இல்லாமல் அழுதுகிட்டு நிற்கும்போது, அவர் என்னைப் பார்த்து ஒரு நூறு ரூபாய் கொடுத்து போய் ஃபீஸ் கட்டுடா, நல்லா படினு சொன்னாரு. என்னால் நினைத்துப் பார்க்க முடியல, இப்படி ஒரு நாள் வரும்னு நினைத்துப் பார்க்க முடியல். 

நல்லா படி பேங்க் வேலைக்கு போயிடலாம்னு சொன்னார். எனக்கு இலக்கிய ஆர்வம் இருக்குனு தெரிஞ்சு, என்ன இந்த துறையில் மெல்ல மெல்ல அறிமுகம் செய்து உருவாக்கினார். நானும் பாரதி பாஸ்கரும் நாலு பேருக்கு தெரிஞ்சவங்களா இருக்கிறோம்னா, அதற்கு முழு காரணமும் அவர்தான். அவர் இல்லைனா இந்த துறையில் எங்களால் வந்திருக்க முடியாது. ரொம்ப எளிமையான மனித தனக்கென ரொம்ப நேர்த்தியாக வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். ஆடம்பரமே விரும்பாதவர், பாமர மக்களுடன் பழக ஆசைப்பட்டவர். 

என்னவோ கடவுள், பாரதியார் மறைந்த கணக்கில் அவரையும் ஏத்துக்கிட்டார். பாரதி மேல மிகுந்த பற்று கொண்ட அவர், பாரதி நினைவு நாளிலேயே காலமாகி இருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பாரதி கூட அவரும் சேர்ந்துட்டார். பாரதியின் நினைவலைகளில் அவர் நிறைந்திருக்கிறார். பாரதியார் பற்றி ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருந்தார். அதை முடிக்கணும்யானு சொல்லிக்க்கொண்டிருந்தார். ஆனால், முடிக்கல, முடிக்காமலே போய்விட்டார். 

உண்மையிலே எனக்கு இதற்கு மேல எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. ரொம்ப கலக்கமா இருக்கு. வாழ்க்கைங்கிறது எதிர்பாராத திருப்பக்கள், ஆச்சரியங்கள், சவால்கள் இருக்கும், ஆனால், இப்படி இருக்கும்னு நான் நினைக்கல. நாலு நாள் முன்னாடி கூட எங்களோடு பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு ரொம்ப உற்சாகமாக இருந்தார். ஆனால், அதுதான் அவருடைய கடைசி பட்டிமன்றம்னு நான் நினைக்கவே இலலி. ரொம்ப பெரிய சோகம். தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஒரு பெரிய இழப்பு. தனிப்பட்ட முறையில், தகப்பனை இழந்ததாக உணர்கிறேன்” என்று நா தழுதழுக்க தேம்பி அழுதபடி கூறினார்.



Source link