புதுடில்லி: டில்லியில், வாகனம் நிறுத்துவது மற்றும் பணத்தகராறு தொடர்பான பிரச்னையில் தந்தை – மகன் இருவரையும் கத்தியால் குத்தி கொன்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
டில்லியின் அலக்நந்தா பகுதியில், ‘தாரா அபார்ட்மென்ட்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
மோதல் இங்கு, மூன்று அடுக்குகளை கொண்ட 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இங்குள்ள, ‘ஓ’ பிளாக்கில் ராகேஷ் சூட், 60, என்பவர் தன் மனைவி, மகன், மகள்களுடன் வசித்து வந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ராகேஷ் சூட்டிற்கு உதவியாக, அவரது மகன் கரண், 30, இருந்தார்.
இவர்கள் இருவரும், அதே குடியிருப்பில், ‘எப்’ பிளாக்கில் வசிக்கும் ஆசாத் என்பவருக்கு, பல மாதங்களுக்கு முன் கடனாக பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை திருப்பிக் கேட்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ராகேஷ் மற்றும் ஆசாத் இடையே நேற்று முன் தினம் இரவு மோதல் ஏற்பட்டது.
அப்போது, கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு ஆசாத்திடம் ராகேஷ் வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மகன் கரண் மற்றும் உறவினர் ராகுல் ஆகியோர் ஆசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த ஆசாத், மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகேஷ் உள்ளிட்ட மூவரையும் சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர்.
விசாரணை அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், மூவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், ராகேஷ் மற்றும் கரண் உயிரிழந்ததை அடுத்து, ராகுலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ஆசாத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
