பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘7, லோக் கல்யாண் மார்க்’ பகுதியில் நடத்தப்பட்ட தர்ணா போராட்டம், அரசிற்கும் காவல் துறைக்கும் மட்டுமல்லாமல், அதில் பங்கேற்ற சுமார் 25 காங்கிரஸ் எம்.பி.க்களுக்குமே பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பிரதமர் இல்லத்தை அடையும் வரை தங்களை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது அந்த எம்.பி.க்களுக்குக் கூடத் தெரியப்படுத்தப்படவில்லை.
போராட்டம் மற்றும் தர்ணா பற்றியத் தகவல் கசிந்து காவல்துறை அல்லது அரசிற்கு எச்சரிக்கை போய்விடக் கூடாது என்பதற்காக, காங்கிரஸ் உயர்மட்டத் தலைமை இந்தத் திட்டத்தை எம்.பி.க்களிடம் இரகசியமாக வைத்திருந்தது. பிரதமர் இல்லத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லமான ’10, ராஜாஜி மார்க்கிற்கு’ அவரது பிறந்தநாள் விழாவிற்காக வருமாறு மட்டுமே எம்.பி.க்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கார்கேவின் இல்லத்தில் கூடியிருந்த 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களில் ஒருவருக்குக் கூட அடுத்த திட்டம் என்னவென்று தெரியவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ஒருவர் தெரிவித்தார். “நாங்கள் கார்கே ஜிக்கு வாழ்த்து தெரிவிக்க மட்டுமே அழைக்கப்பட்டுள்ளோம் என்றுதான் நினைக்கிறோம்” என்று அவர் கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மேலும் அவர் பேசுகையில், “பிறந்தநாள் விழா முடிந்ததும், எந்தக் கேள்வியும் கேட்காமல் ராகுல் காந்தியின் வாகன அணியை பின்தொடர்ந்து செல்லுமாறு கூறப்பட்டது. நாங்களும் அதைச் செய்து ‘7, லோக் கல்யாண் மார்க்’ பகுதியை அடைந்தோம். அங்கிருந்த பின்னரே, நாங்கள் இங்கு அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று எங்களிடம் கூறப்பட்டது” என போராட்டக் களத்தில் வைத்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் தெரிவித்தார். ராகுல் – பிரியங்கா கே.சி. வேணுகோபாலும் இணைந்து தீட்டிய திட்டமே இது என்றும் அந்த எம்.பி குறிப்பிட்டார். காங்கிரஸ் உயர்மட்டத் தலைமையால் மிக கச்சிதமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், ‘நீட்’ தேர்வுத் தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை ஆகிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் குரலை வலுவாகப் பதிவு செய்ய உதவியுள்ளது.
மற்றொரு புறம், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவாகப் பெரும்பாலான காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் திரண்டுள்ளன. செவ்வாய்க்கிழமை அன்று சரத் பவார் (NCP-SP) மற்றும் அரவிந்த் கெஜரிவால் ஆகிய தலைவர்கள் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்குச் சென்றனர். அதே வேளையில், சுப்ரியா சுலே (NCP) ‘7, லோக் கல்யாண் மார்க்’ பகுதிக்கு வந்து, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்பாகச் சந்தித்துப் பேசினார்.
நீட்-யுஜி 2026 தேர்வுத் தாள் கசிவுக்குப் பொறுப்பேற்கக் கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரியும் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகே போராட்டம் நடத்தினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரை டெல்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது. டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்படும்போது பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வதேரா, “அவர்கள் கோழைகள், பயப்படுகிறார்கள். நாங்கள் அவர்களைக் கண்டு பயப்படவில்லை, அவர்கள்தான் எங்களைக் கண்டு பயப்படுகிறார்கள்” என்று கூறினார்.
போராட்டக் களத்தில் இருந்து ராகுல் காந்தியை பலவந்தமாக அகற்றி, பேருந்தில் ஏற்றிச் செல்ல காவல்துறையினர் முயன்றனர். தேர்வுத் தாள் கசிவுக்கு எதிராக முந்தைய நாள் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை அத்துமீறல் நடத்தியதாகக் கூறி, ராஜாஜி மார்க்கில் இருந்து லோக் கல்யாண் மார்க் நோக்கிப் பேரணியாகச் சென்ற பல காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது. கைது செய்யப்பட்டு காவல் வாகனத்திற்குள் இருந்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்தப் போராட்டம் அரசாங்கத்திற்கு எதிரான பெரிய இயக்கத்தின் தொடக்கம் என்று கூறினார்.
“இது முடிவல்ல; ராகுல் காந்தியின் தலைமையில் ஒரு புதிய புரட்சியின் தொடக்கம். அவர்கள் எங்களைச் சிறையில் அடைக்கலாம், லத்தி சார்ஜ் நடத்தலாம் (அ) அசிங்கமாக நடத்தலாம். ஆனால், தேர்வுத் தாள் கசிவால் தங்கள் எதிர்காலத்தை இழந்து, குடும்பத்தின் நம்பிக்கையைத் தொலைத்த இந்தியாவின் லட்சக்கணக்கான மகன்களுக்கும் மகள்களுக்கும் மோடி ஜி பதிலளித்தே ஆக வேண்டும். இந்தப் புரட்சி இனி பெரும் தீயாக எரியும்; ராகுல் காந்தியின் தலைமையில் இதை நிறுத்த முடியாது” என்று சுர்ஜேவாலா கூறினார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் மாணவர் நலனுக்காகவே நாங்கள் அனைவரும் போராடி வருகிறோம். எங்களுக்கு நீதி வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்… 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இங்கு உள்ளனர். யாரும் கைதுக்கு அஞ்சவில்லை… நீதி கிடைக்கும் வரை இந்த இயக்கம் தொடரும்…” என்றார். அக்பர் ரோடு அருகே நடந்த தர்ணா போராட்டத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தையின் போது ராகுல் காந்தி வாக்கு தவறினார் என பிரதமரின் அலுவலக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டிய சிறிது நேரத்திலேயே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எக்ஸ் தளத்தில் ஜிதேந்திர சிங் பதிவிட்ட பதிவில், அக்பர் ரோடு பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா போராட்டத்தைத் தொடங்கியதை அடுத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகனுடன் தாம் நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஜிதேந்திர சிங்கின் கூற்றுப்படி, நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் மற்றும் தற்போதைய மாணவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டால் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக ராகுல் காந்தி ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அரசாங்கம் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிறகு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி ராகுல் காந்தி மற்றொரு நிபந்தனையைச் சேர்த்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் அதுவல்ல என்று தெரிவித்தும் ராகுல் காந்தி இடத்தை காலி செய்ய மறுத்துவிட்டதாகவும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாகவும் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டினார். நீட் தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார் நிலையில் உள்ள போதிலும், நாடாளுமன்ற விதிகளின் கீழ் அத்தகைய விவாதத்தைக் கோரி காங்கிரஸ் சார்பில் எவ்வித முறைப்படியான அறிவிப்பும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். நீட்-யுஜி 2026 தேர்வுத் தாள் கசிவு மற்றும் ஆயுதமேந்தாத மாணவர் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை நடவடிக்கை காரணமாக அரசியல் மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸின் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரியதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியது. அதே நேரத்தில் தேர்வுச் சர்ச்சைகளுக்கும், மாணவர்கள் மீதான காவல் துறையின் அத்துமீறல்களுக்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
