பிரிக்ஸ் அமைப்பை ஒற்றை ஆளா தூக்கி நிறுத்தும் சீனா.. இந்தியா உட்பட மற்ற நாடுகள் நிலைமை மோசம் தான்

டெல்லி: உலக பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருப்பதாக கூறப்பட்டாலும், அந்த வளர்ச்சியின் பெரும்பகுதி ஒரே ஒரு நாட்டின் பங்களிப்பால் ஏற்பட்டிருப்பதாக புதிய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக பிரிக்ஸ் அமைப்பில் இருந்து சீனாவை விலக்கிவிட்டு பார்த்தால், மற்ற உறுப்பு நாடுகளின் உலக வருமானம் என்பது உயரவில்லை.. மாறாக சரிந்துள்ளது.

2011ஆம் ஆண்டில் உலகின் மொத்த வருமானத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 21.9 சதவீதமாக இருந்தது. 2025ஆம் ஆண்டில் இது 28.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், இதில் சீனாவை விலக்கி வைத்துவிட்டு பார்த்தால், மற்ற 10 நாடுகளின் பங்கு 11.9 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதமாக குறைந்துள்ளது.

அதாவது, பிரிக்ஸ் அமைப்பின் வருமானம் அதிகரித்திருந்தாலும், அந்த உயர்வின் முக்கிய காரணமாக சீனாவே உள்ளது. 2011 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் உலக வருமான பங்கு அதிகரித்ததில் சுமார் 72 சதவீதம் சீனாவின் பங்களிப்பாகும். மற்ற நாடுகள் இணைந்து அந்த வளர்ச்சியை உருவாக்கவில்லை என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது.

2011ஆம் ஆண்டில் உலக வருமானத்தில் சீனாவின் பங்கு 10 சதவீதமாக இருந்தது. 2025ஆம் ஆண்டில் இது 17.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் பிரிக்ஸின் மொத்த மக்கள் தொகையில் சீனாவின் பங்கு 38.4 சதவீதத்தில் இருந்து 35.7 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், பிரிக்ஸ் வருமானத்தில் சீனாவின் பங்கு 45.6 சதவீதத்தில் இருந்து 60.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் நீண்டகால உறுப்பினர்களான பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவை மட்டும் எடுத்து கொண்டாலும் இதே நிலைதான். இந்த நான்கு நாடுகளின் உலக வருமான பங்கு 2011ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 7.9 சதவீதமாக குறைந்துள்ளது.

வர்த்தக புள்ளிவிவரங்களை எடுத்து பார்த்தாலும் இதே நிலையை காட்டுகின்றன. 2011ஆம் ஆண்டில் ஏற்றுமதியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 23 சதவீதமாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் அது 25 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், சீனாவை நீக்கி பார்த்தால், அந்த பங்கு 12.4 சதவீதத்தில் இருந்து 10.1 சதவீதமாக குறைந்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் ஏற்றுமதி பங்கு அதிகரித்ததில் 94 சதவீதம் சீனாவின் பங்களிப்பாக உள்ளது.

சீனா மற்றும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரஷ்யா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நான்கு நாடுகளை நீக்கிவிட்டால், பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகிய ஆறு நாடுகளின் ஏற்றுமதி பங்கு 2011ஆம் ஆண்டிலும் 5.1 சதவீதமாகவும், 2023ஆம் ஆண்டிலும் 5.1 சதவீதமாகவும் இருந்துள்ளது. அதாவது 12 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.

பிரிக்ஸ் நாடுகளுக்குள் பொருளாதார வேறுபாடுகளும் பெரியளவில் காணப்படுகிறது. சீனா மற்றும் எத்தியோப்பியாவில் தனிநபர் வருமானம் டாலர் அடிப்படையில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. ஆனால் பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் 2025ஆம் ஆண்டுக்கான டாலர் மதிப்பிலான வருமானம் 2011ஆம் ஆண்டை விட குறைவாக உள்ளது. பிரேசிலின் வருமானம் 6 சதவீதமும், தென்னாப்பிரிக்காவின் வருமானம் 20 சதவீதமும், ஈரானின் வருமானம் 36 சதவீதமும் குறைந்துள்ளது.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் வளர்ச்சியை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டாலும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. 125 நாடுகளை ஒப்பிட்டபோது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சராசரி 66வது இடத்தில் உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் சராசரி வளர்ச்சி ஆண்டுக்கு 2.7 சதவீதமாக உள்ளது. பிரிக்ஸ் இல்லாத நாடுகளின் சராசரி வளர்ச்சியும் 2.7 சதவீதம்தான். வேகமாக வளர்ந்த நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் முதலிடத்திலும், வியட்நாம் 3வது இடத்திலும், கம்போடியா 5வது இடத்திலும் உள்ளன. முதல் 25 வேகமான வளர்ச்சி நாடுகளில் 23 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இல்லாத நாடுகளாகும்.

சீனா தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்றாலும் இந்தியாவுக்கு இதில் பங்கு இல்லாமல் இல்லை. சிறந்த பெர்பமன்ஸை காட்டும் 2வது நாடாக இந்தியா இருக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 5.2 சதவீத வளர்ச்சியுடன், உலக வருமானத்தில் இந்தியாவின் பங்கு 2011ஆம் ஆண்டில் 2.5 சதவீதத்தில் இருந்தது. இது 2025ஆம் ஆண்டில் 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக சராசரி வருமானத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் தனிநபர் வருமானமும் 13.4 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆனால், வர்த்தகத்தில் தான் இந்தியாவுக்கு சிக்கல் இருக்கிறது. 2011ஆம் ஆண்டில் சர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 1.71 சதவீதமாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் அது 1.88 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. மறுபுறம் வியட்நாமின் பங்கு 0.52 சதவீதத்தில் இருந்து 1.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. வியட்நாமின் ஏற்றுமதி என்பது 93 பில்லியன் டாலரில் இருந்து 345 பில்லியன் டாலராக உயர்ந்த நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி 307 பில்லியன் டாலரில் இருந்து 432 பில்லியன் டாலராக மட்டுமே உயர்ந்துள்ளது.

அதாவது பிரிக்ஸ் அமைப்பில் இருப்பதால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கவில்லை. அதேநேரம் பிரிக்ஸில் இருப்பதே பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்றும் கூற முடியாது. ஏனெனில் பிரிக்ஸுக்கு பொதுவான சந்தை, வர்த்தக சலுகை அல்லது உறுப்பினர் நாடுகளுக்கிடையே பொருளாதார உறுதிமொழி போன்றவை இல்லை. எனவே, உறுப்பு நாடுகளின் வளர்ச்சியை நேரடியாக பிரிக்ஸ் அமைப்புடன் இணைக்க முடியாது.

ஆனால், கடந்த 15 ஆண்டுகளின் டேட்டாவை நாம் எடுத்து பார்க்கும்போது, பிரிக்ஸின் வருமான பங்கு அதிகரிப்பில் சீனாவின் பங்களிப்பே மிக பெரியது என்பது தெளிவாகிறது. இந்திய உட்பட மற்ற நாடுகளுக்கு இதில் மிக குறைந்த பங்கே இருப்பது தெளிவாக தெரிகிறது.