பிரிக்ஸ் உச்சி மாநாடு: டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு; சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடு

புதுடில்லி: டில்லியில் இன்று துவங்கும், ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டை முன்னிட்டு மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பல சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டில்லி பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில், 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை (செப் 12) துவங்குகிறது. நாளை மறுநாள் நிறைவடைகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் டில்லி வரத் துவங்கியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று அதிகாலை டில்லி வந்தடைந்தார். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்சிசி, அபுதாபி இளவரசர் முஹமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஆகியோரும் டில்லி வந்தடைந்தனர்.

உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் டில்லியில் முகாமிட்டுள்ளதை தொடர்ந்து, டில்லி மாநகரம் முழுதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநகர் முழுவதும், 15,000 போலீசார், 200 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் முக்கிய இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். டில்லி மாநகர் முழுதும் 500-க்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

மிக முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்லும் பாதைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. பல முக்கியச் சாலைகளில் போலீஸ் உயர் அதிகாரிகள் விரிவான ஆய்வு நடத்தினர். பல்வேறு முகமைகள் மற்றும் அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டங்களையும் நடத்தினர்.

விமான நிலையம், தங்கும் விடுதிகள், பாரத் மண்டபம் மற்றும் பிரமுகர்கள் பார்வையிடக்கூடிய சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி மாவட்டத்தில் உயர்- தெரிவுத்திறன் கொண்ட கேமராக்கள், முகத்தை அடையாளம் காணும் அமைப்புகள் மற்றும் வாகன எண்ணை பதிவு செய்யும் கேமராக்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

உச்சி மாநாடு நடக்கும் பாரத் மண்டபம் மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் தங்கும் விடுதிகளில் மேம்படுத்தப்பட்ட அணுகல் கட்டுப்பாடு, சரிபார்ப்பு, உளவுத் தகவல் சேகரிப்பு, போக்குவரத்து நிர்வாகம் மற்றும் அவசர கால நடவடிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

டில்லியில் இன்றும் நாளையும் மதுரா சாலை, சர்தார் படேல் மார்க், சாந்தி பாதை, ஜன்பத், அசோகா சாலை, பாரக்கம்பா சாலை, டால்ஸ்டாய் மார்க், ஆப்பிரிக்க அவென்யூ சாலை, நீதி மார்க், பஞ்சசீல் மார்க் மற்றும் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலை உட்பட, 35 சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, டில்லி மாநகர போலீஸ் தெரிவித்துள்ளது.

நொய்டா மற்றும் மத்திய டில்லிக்கு இடையிலும், கிழக்கு டில்லி மற்றும் மத்திய பகுதிகளுக்கு இடையிலும், துவாரகா மற்றும் மேற்கு டில்லியிலிருந்து தவுலா குவான், விமான நிலையம் மற்றும் தெற்கு டில்லி செல்வோர் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும்.

சாகேத்தில் உள்ள விடுதிக்கும் மத்திய தில்லிக்கும் இடையே எகிப்து நாட்டு பிரமுகர்கள் பயணிக்கும் போது, தெற்கு டில்லி சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும்.பிரிக்ஸ் உச்சி மாநாட்டை கருத்தில் கொண்டு டில்லி மக்கள் இரண்டு நாட்களும் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகளின் தலைவர்களின் ஒவ்வொரு பயணத்துக்கும் தனித்தனி போக்குவரத்து ஒழுங்குமுறை, அணுகல் கட்டுப்பாடுகள் மற்றும் வழித்தட ஒருங்கிணைப்பு தேவைப்படுவதால், வி.ஐ.பி., வருகையின் போது ஏற்படும் பாதிப்பை விட அதிகமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். டில்லி மெட்ரோ தொடர்ந்து இயங்கும். ஆனாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக தேவைப்பட்டால் சில நிலையங்கள் அல்லது நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் தற்காலிகமாக மூடப்படலாம்.

அதேபோல, டில்லி மாநகரப் பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்படும். ஆனால், போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சாலை வழியாக செல்லும் பஸ்கள் வழித்தடம் மாற்றப்படலாம். ஆட்டோ, டாக்ஸி மற்றும் மொபைல் போன் செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவைகள் தொடர்ந்து இயங்கும். இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் அனுமதிக்கப்படாது.

மேலும், யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆகியவற்றின் தேர்வு எழுதச் செல்வோர் முன்கூட்டியே புறப்பட வேண்டும் எனவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல, மருத்துவமனைக்கு செல்வோர், செல்லும் வழிகளை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், அருகிலுள்ள போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளிடமிருந்து தகவலை தெரிவித்து தகுந்த உதவியை பெறலாம். கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சாலைகளில் பால், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என, போலீசார் கூறியுள்ளனர்.

ஜொலிக்கும் தலைநகரம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, தலைநகர் டில்லி அலங்கரிக்கப்பட்டுளது. வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் முக்கியச் சாலைகளின் சந்திப்புகள் ஜொலிக்கின்றன. அழகுபடுத்தப்பட்ட சாலைகள் மற்றும் பிரிக்ஸ் மாநாட்டு அறிவிப்புப் பலகைகள் என மத்திய டில்லி புதுப்பொலிவு அடைந்துள்ளது. படேல் சவுக், விண்ட்சர் பிளேஸ், மண்டி ஹவுஸ், தீன் மூர்த்தி, லோக் கல்யாண் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பிரதமர் அலுவலக சந்திப்பு சாலை ஆகிய இடங்களில் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கின்றன.

புதுடில்லி மாநகராட்சி சார்பில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டு சின்னம் பொறிக்கப்பட்ட எல்.இ.டி., பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. முக்கிய வழித்தடங்களில் உள்ள தெருவிளக்கு கம்பங்களில் பிரிக்ஸ் மாநாட்டு பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன.

விமான நிலையம் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டல்களை, நகரின் மையப்பகுதியில் உள்ள உச்சிமாநாடு நடக்கும் பாரத் மண்டபத்துடன் இணைக்கும் வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து சாலைகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சாலையோர பூங்காக்களும் பச்சைப் பசேலென காட்சி தருகின்றன.

டில்லியில், 17 முக்கிய வட்டச் சந்திப்புகள், 12 ஹோட்டல் வளாகங்கள் மற்றும் 10 முக்கிய கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் தங்கும் ஹோட்டல்களை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகளின் ஓரங்களில் உள்ள மரங்கள், புதர்கள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

சாலை ஓரங்களில், 350 மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டிகள் பிரிக்ஸ் கருப்பொருள் கொண்ட வடிவமைப்புகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 15 இடங்களில் மலர் அலங்கார பலகைகளும், ஒன்பது இடங்களில் மலர் நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பயணிக்கும் சாலைகளின் இரு பக்கமும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கடந்த, 2016-ம் ஆண்டு டில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தியபோது சாணக்யபுரியில் உருவாக்கப்பட்ட, 107 வகையான ரோஜா செடிகளை கொண்ட பிரிக்ஸ் நட்பு ரோஜாத் தோட்டமும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

டில்லி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவை இணைந்து பாரத் மண்டபம், சாராய் காலே கான், லோதி சாலை, நிஜாமுதீன், சாகேத் மற்றும் ஷேக் சராய் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் விரிவான அலங்காரங்களை செய்துள்ளன.

Source link