பிரிக்ஸ் நாடுகளின் எழுச்சியால் ‘கச்சா எண்ணெய் கூட்டணி’ சாத்தியமா?

பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்கும் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் சனிக்கிழமை (செப்.12) டெல்லியில் தொடங்கும் வேளையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 108 டாலராக அதிகரித்துள்ளது.

ஆசிய மற்றும் அரபு நாடுகளில் நடக்கும் எண்ணெய் வர்த்தகம் என்பது, அட்லாண்டிக் கடலுக்கு அக்கரையில் உள்ள நாட்டின் (அமெரிக்கா) நாணய (டாலர்) மதிப்பைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் சந்தை நிலைகுலைந்து நிற்கிறது. இந்தத் தருணத்தில், நடக்கும் பிரிக்ஸ் (BRICS) மாநாடு, உலகளாவிய வணிக ஒழுங்கை மாற்றியமைக்கும் முக்கிய அதிகார மையமாக உருவெடுத்துள்ளது.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான சவுதி அரேபியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளும், மிகப் பெரிய நுகர்வோர்களான சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. பிரிக்ஸ் பிளஸ் கூட்டமைப்பு, தமக்கான ஒரு சுயாட்சி பெற்ற புதிய ‘ஆற்றல் பாதுகாப்பு நெட்வொர்க்கை’ உருவாக்கும் பட்சத்தில், அது ‘பெட்ரோ-டாலர்’ சாம்ராஜ்யம், அமெரிக்க ஆதிக்கத்தின் வீழ்ச்சிக்கும் புதிய உலகப் பொருளாதார அமைப்புக்கும் வழிவகுக்கும்

பிரிக்ஸ் நாடுகள் என்றால் என்ன?

2006-ஆம் ஆண்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து ‘BRIC’ என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கின. பின்னர், 2010-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா இதில் உறுப்பினராகச் சேர்ந்த பிறகு, இக்கூட்டமைப்பு ‘BRICS’ என உருப்பெற்றது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மேலாதிக்கத்தைக் குறைத்து, வளரும் நாடுகளுக்கு இடையே வணிகம், பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம்.

 பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாக உள்ளன. (2024-ம் ஆண்டில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, அமீரகம் ஆகிய நாடுகளும் புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர்).

முக்கியத்துவம் என்ன?

 பிரிக்ஸ் பிளஸ் அமைப்பானது உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் மிகப் பெரிய நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரையும் ஒன்றிணைக்கிறது.

 பிரிக்ஸ் பிளஸ் உறுப்பு நாடுகள் உலகின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் சுமார் 32 சதவீதத்தையும், கச்சா எண்ணெய் உற்பத்தியில் 43 சதவீதத்தையும் பங்களிக்கின்றன.  இனி கஜகஸ்தான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இதில் இணைக்கப்பட்டால், இந்த விகிதங்கள் மேலும் அதிகரிக்கும்.

சீனாவும் இந்தியாவும் உலகளாவிய பெட்ரோலிய இறக்குமதியில் 38 சதவீத பங்கையும், புதிய உறுப்பு நாடுகளும் இணைக்கப்பட்டால் இது 55 சதவீதமாக உயரும்.

 பிரிக்ஸ் அமைப்பில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர், துறைமுகங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், நிதி நிறுவனங்கள், எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன்கள் என அனைத்தும் உள்ளன. இருந்தபோதிலும் கச்சா எண்ணெய் விலையைத் தங்களுக்குள் தீர்மானிக்க முடியாத நிலையில், டாலரின் மதிப்புதான் அதைத் தீர்மானிக்கிறது; உலகச் சூழல்தான் நிர்ணயிக்கிறது.

 இந்தியாவும் கச்சா எண்ணெய் விலை உயர்வும்

 இந்தியாவின் சவாலும் தேவையும் இந்தியாவைப் பொறுத்தவரை, தன் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. வளைகுடாவில் போர் பதற்றம், கப்பல் கட்டண உயர்வு மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஏற்படும் தடைகள் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன.

மேலும், ரஷ்யா மற்றும் ஈரான் மீது அமெரிக்கா விதிக்கும் புதிய வரிகளும் பொருளாதாரத் தடைகளும் உலக நாடுகளின் அதிருப்தியை அதிகரித்துள்ளன. எனவே, எரிசக்தி அமைப்பை வலுவானதாக மாற்ற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டாலர் ஆதிக்கத்தையும் மேற்கத்திய நாட்டின் ஸ்விஃப்ட் (SWIFT) பணப் பரிவர்த்தனை அமைப்பையும் சார்ந்திருப்பதைத் தவிர்க்க பிரிக்ஸ் நாடுகள் பல மாற்று வழிகளை முன்னெடுக்க முடியும்.

 > டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாய், சீன யுவான் அல்லது அமீரக திர்ஹாம் மூலம் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யலாம்.

 > டிஜிட்டல் நாணயங்கள் (CBDCs) மற்றும் பிரிக்ஸ் பே கட்டமைப்பு மூலம் உறுப்பு நாடுகளுக்கிடையே நேரடி நிதி பரிவர்த்தனை செய்ய முடியும்.

 > சந்தை விலையேற்றங்களில் பாதிக்காமல் இருக்க, உறுப்பு நாடுகளுக்கு இடையே குறைந்த நிலையான விலையில் நீண்டகால எண்ணெய் விநியோக ஒப்பந்தங்களை அமைப்பது.

 சர்வதேச தாக்கமும், அமெரிக்காவின் நிலையும்:

 பிரிக்ஸ் ஆற்றல் கூட்டமைப்பு சாத்தியமானால், 1970-களிலிருந்து நீடிக்கும் ‘பெட்ரோ-டாலர்’ கட்டமைப்பு படிப்படியாக வலிமையிழக்கும்.  அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவு காலம் தொடங்கிவிடும். குறிப்பாக, டாலரின் மதிப்பு அதளபாதாளத்துக்குச் செல்லும். அமெரிக்காவுக்கு பெரிய நெருக்கடியைப் பிரிக்ஸ் நாடுகளால் உருவாக்க முடியும்.

 உலக நாடுகள் தங்களது கையிருப்பு சொத்தாக டாலரைத்தான் வைத்துள்ளன அது குறையத் தொடங்கும். இதனால் அமெரிக்காவில் டாலருக்கான மதிப்பு குறைந்து, விலைவாசி உயர்ந்து, பணவீக்கம் உயரும்.

டாலர் மதிப்பு உலக நாடுகளிடையே குறையும்போது, அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகும். சர்வதேச வங்கிகளில் கடன் வாங்கும் திறன் குறைந்து, பொருளாதார வளர்ச்சி சீர்குலையும்.

மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பிராந்தியங்களில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையும். சவூதி அரேபியா போன்ற அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகள் கூட பிரிக்ஸ் அமைப்பில் சேரலாம்.

 கச்சா எண்ணெய் விலை குறையுமா?

 பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே கூட்டமைப்பு உருவாகினால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் இரு வகையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அவை:

 பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பெரிய இறக்குமதியாளர்களான இந்தியா, சீனாவுக்கு ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா குறைந்த விலையில், நீண்டகால அடிப்படையில் கச்சா எண்ணெயை வழங்க முடியும். இது உறுப்பு நாடுகளுக்குள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

 பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும் பட்சத்தில், மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வது குறையத் தொடங்கும். இதனால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எண்ணெய் விலை மேலும் உயரும்.

 பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் ஒரு புதிய ஆற்றல் பாதுகாப்பு நெட்வொர்க்கை அமைப்பது சாத்தியமானால், அது 21-ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதார வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும்!

Source link