பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, செப்டம்பர் 12ஆம் தேதி புது டெல்லியில் பிரிக்ஸ் (BRICS) பிரகடனத்தை வெளியிடும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி
பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இஸ்ரேலின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், பாலத்தீனம் மற்றும் லெபனான் குறித்து பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, அமெரிக்காவுடனான போரில் எதிரெதிர் தரப்புகளில் உள்ள இரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் மத்திய கிழக்கில் நிலவும் சூழலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
பிரிக்ஸ் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அல்லது அமெரிக்கா குறித்து நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், “நியாயமற்ற மற்றும் ஒருதலைப்பட்சமான பாதுகாப்புவாத நடவடிக்கைகளால்” பல நாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகளையே இந்தக் குறிப்பு மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் குறித்து கவலை; இஸ்ரேலுக்கு செய்தி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஸா நகர் மீதான தாக்குதலுக்குப் பிறகு, தாய் ஒருவர் தனது மகளைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்கிறார் (கோப்புப்படம்).
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து இந்த பிரகடனம் “ஆழ்ந்த கவலை” தெரிவித்துள்ளது. பாலத்தீன விவகாரம் தொடங்கி, அமெரிக்கா-இரான் மோதல் வரையிலான மத்திய கிழக்கு நெருக்கடிகளுக்கு அதிகபட்ச கட்டுப்பாட்டுடனும், தூதரக முயற்சிகள் மூலமாகவும் தீர்வு காண வேண்டும் என்று பிரிக்ஸ் உச்சி மாநாடு வலியுறுத்தியுள்ளது.
எந்த ஒரு நாட்டையும் நேரடியாகக் குற்றம்சாட்டுவதைத் தவிர்த்துள்ள பிரகடனம், பொது உள்கட்டமைப்புகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்துள்ளது.
காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதிகளில் நிலவும் மனிதாபிமான சூழல் குறித்தும் பிரகடனம் தீவிர கவலை தெரிவித்துள்ளது.
காஸாவில் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்தத் தடையுமின்றி மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாலத்தீனர்கள் கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரில் பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் பொது இடங்களைக் குறிவைப்பது, சுகாதார நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை சட்டவிரோதமாகத் தடுப்பது உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல்கள் அனைத்தையும் பிரகடனம் கண்டித்துள்ளது.
பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணிகள் முகமைக்கான ஆதரவையும் பிரகடனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலைக் குறிப்பிடாமல் பாலத்தீனம், லெபனான் குறித்து பேச்சு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, செப்டம்பர் 9ஆம் தேதி தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து காணப்பட்ட காட்சி (கோப்புப்படம்)
இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளையும் பிரகடனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த உத்தரவுகளில், காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்வது இஸ்ரேலின் சட்டபூர்வப் பொறுப்பு என்பதை நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியிருந்தது.
இரு நாடுகள் தீர்வுக்கான தனது ஆதரவையும் பிரகடனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, 1967ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட பாலத்தீன நாட்டையும், கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகவும் கொண்ட தீர்வு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
லெபனானில் போர் நிறுத்தத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும், லெபனானின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தனது படைகளை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் மாற்றம் சிரியாவில் ஏற்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“இஸ்ரேலுக்கு நிச்சயம் பிடிக்காது”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரிக்ஸ் (BRICS) பிரகடனம் இஸ்ரேலை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அது பாலத்தீனம் மற்றும் லெபனான் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, மத்திய கிழக்கு விவகாரத்துக்கு அமைதி தீர்வு காணுமாறு வலியுறுத்தியது.
பிரகடனத்தில் மத்திய கிழக்கு நிலைமை குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து, அட்லாண்டிக் கவுன்சில் என்ற சிந்தனைக் குழுவின் தெற்காசியாவுக்கான மூத்த ஆய்வாளரான மைக்கேல் குகல்மேன், “இந்த பிரகடனத்தில் பாலத்தீனர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நான்கு வலுவான பத்திகள் இடம்பெற்றுள்ளன. இஸ்ரேல் இந்தியாவின் முக்கிய கூட்டாளிகளுள் ஒன்று. இருப்பினும், புதிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடு, இந்தியாவின் சொந்த நிலைப்பாடு மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் பாலத்தீன விவகாரத்துக்கு உள்ள பரவலான ஆதரவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், பிரிக்ஸ் நாடுகளிடையே ஒருமித்த கருத்தை தக்கவைத்துக்கொள்ள இது விவேகமான நடவடிக்கையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியா மூலோபாயத் தன்னாட்சியை கடைபிடிக்கிறது. இதன் மூலம் வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த நாடுகளுடன் அது நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறது. வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட நாடுகளின் குழுக்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் இடத்தில், இந்த மூலோபாயத் தன்னாட்சி இந்தியாவை வைத்துள்ளது. பெரும்பாலான பிரிக்ஸ் நாடுகள் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளிகள். பிரிக்ஸ் அமைப்புக்குள் இந்தியாவின் ஒரே போட்டியாளரான சீனாவுடனான பதற்றமும் தணிந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பிரிக்ஸ் நாடுகள் வெளியிட்ட பிரகடனத்தில் யுக்ரேன் குறித்து ஒரு வார்த்தைகூட இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக தக்சஷிலா நிறுவனத்தின் ஆய்வாளரான மனோஜ் கெவல்ரமணி தெரிவித்துள்ளார்.
இரான் மீதான தாக்குதல் குறித்து பிரிக்ஸ் நாடுகள் மென்மையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதையும் அவர் விமர்சித்துள்ளார்.
“இரான் மீதான தாக்குதல்கள் தொடர்பாக கடந்த ஆண்டு ரியோ பிரகடனத்தில் பயன்படுத்தப்பட்ட மொழியில் இருந்து இந்தப் பிரகடனம் விலகியிருப்பதாகத் தெரிகிறது. 2025ஆம் ஆண்டு இரான் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த ஆவணத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடவடிக்கைகளோ, பிராந்தியத்தில் உள்ள நாடுகளைக் குறிவைத்து இரான் நடத்திய தாக்குதல்களோ கண்டிக்கப்படவில்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழு விவகாரமும் “மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம்” என்று மட்டுமே பொதுவாக விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், “அந்தந்த நாடுகளின் தேசிய நிலைப்பாடுகளை நினைவுகூர்ந்து” என்ற வாசகமும் சேர்க்கப்பட்டுள்ளது.
“இதனால், நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீடிப்பதற்கான இடம் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பொதுவான நிலைப்பாட்டுக்குப் பதிலாக, கவலையைப் பற்றிய பலவீனமான மற்றும் மென்மையான வெளிப்பாடாக இது அமைந்துள்ளது.”
தி இந்து நாளிதழின் தூதரக விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், “இரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்புதலுடன் இடம்பெற்றுள்ள மேற்கு ஆசியா குறித்த பத்தியில், அமெரிக்கா-இரான் போர் அல்லது பிராந்தியத்தில் இரான் நடத்திய தாக்குதல்கள் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. அதேநேரத்தில், லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் வலுவாக விமர்சிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஹட்சன் இன்ஸ்டிட்யூட் சிந்தனைக் குழுவின் கிரேட்டர் ஆசியாவுக்கான மூத்த ஆய்வாளரான கென் மொரியாசு, இந்தியா-இஸ்ரேல் உறவு எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில், “இந்தியாவின் தலைமையில் வெளியிடப்பட்டுள்ள பிரிக்ஸ் கூட்டுப் பிரகடனம், பாலத்தீனர்கள் ‘தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையை’ ஆதரிக்கிறது.
“இஸ்ரேல்-பாலத்தீன மோதலுக்கு நியாயமான மற்றும் நீடித்த தீர்வு ஏற்பட வேண்டுமெனில், பாலத்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்குத் திரும்பும் உரிமை உள்ளிட்ட அவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பிரகடனம் கூறுகிறது.
“இது 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரியோ பிரகடனத்திலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், 2024ஆம் ஆண்டு கஸான் பிரகடனத்திலோ அதற்கு முந்தைய பிரிக்ஸ் உச்சி மாநாடுகளின் பிரகடனங்களிலோ இது இடம்பெறவில்லை.
“இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் இந்தியா, இஸ்ரேலுடனான தனது உறவை ‘சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மை’ என்ற நிலைக்கு உயர்த்தியது. இருந்தபோதிலும், இந்த பிரிக்ஸ் வாசகத்தைத் தொடர்ந்து இடம்பெறச் செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
“இந்தப் பன்முக வெளியுறவுக் கொள்கை எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், இது இஸ்ரேலுக்குப் பிடிக்காது.”
‘ஒருதலைப்பட்சமான தடைகள்’ குறித்து அமெரிக்கா மீது மறைமுக விமர்சனம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரிக்ஸ் பிரகடனம் அமெரிக்கத் தடைகள் குறித்து விவாதிக்கிறது.
பிரிக்ஸ் பிரகடனத்தில் அமெரிக்காவின் பெயர் நேரடியாக இடம்பெறவில்லை. ஆனால், அதன் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சட்டத்தை மீறும், பரவலான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும், ஏழை மக்களை அதிகம் பாதிக்கும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை பிரகடனம் கண்டித்துள்ளது.
பிரகடனத்தில் அமெரிக்காவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஐ.நா.வின் அனுமதியின்றி அதிக அளவில் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பது தெளிவு.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகள் மீதும் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
சர்வதேச சட்டத்தையும் ஐ.நா. சாசனத்தையும் மீறும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை, குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் இல்லாமல் விதிக்கப்படும் தடைகளை, பிரிக்ஸ் நாடுகள் எதிர்ப்பதாக பிரகடனம் தெரிவித்துள்ளது.
இந்த வார்த்தைகள், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தொடர்பாக ரஷ்யாவும் இரானும் நீண்ட காலமாக முன்வைத்து வரும் விமர்சனங்களைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
அமெரிக்க வரிகள் மீதான விமர்சனம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்கிறார் (கோப்புப்படம்).
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகள் குறித்து பிரகடனம் நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் ஒருதலைப்பட்சமான வரி மற்றும் வரியல்லாத நடவடிக்கைகளை அது கண்டித்துள்ளது.
இது அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் பொருளாதார அழுத்தக் கொள்கைக்கு எதிரான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபரான பிறகு, ரஷ்யாவைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து பிரிக்ஸ் நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்குச் செல்லும் இறக்குமதிகள் மீது அவரது நிர்வாகத்தின் வரிகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
வரிகளுடன் சேர்த்து விரிவான பொருளாதாரத் தடைகளை இரான் எதிர்கொண்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பை பலமுறை “அமெரிக்காவுக்கு எதிரானது” என்று வர்ணித்துள்ளதுடன், பிரிக்ஸ் அமைப்பில் சேரும் நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளை இந்தியா “நியாயமற்றது, அநீதியானது மற்றும் நியாயப்படுத்த முடியாதது” என்று விமர்சித்துள்ளது. தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





