பிரிக்ஸ் மாநாடு இந்தியாவுக்கு கிடைத்த பெருமை; ப.சிதம்பரம் Vs சசி தரூர்… காங்கிரஸில் மோதல்

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்ரபம் கேள்வி எழுப்பிய நிலையில், சக கட்சி நிர்வாகியும், காங்கிரஸ் எம்பியுமான சசி தரூர் பதிலடி கொடுத்துள்ளார்.

உலக நாடுகளின் கூட்டமைப்புகளில் ஒன்றான பிரிக்ஸ் மாநாடு நாளை முதல் இரு தினங்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா, தென்னாப்ரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த மாநாடு இந்தியாவில் நடப்பதை கவுரவமாக கருதி வரும் நிலையில், பிரிக்ஸ் மாநாட்டினால் இந்தியாவுக்கு என்ன பயன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; பிரிக்ஸ் அமைப்பு போல, எஸ்சிஓ (SCO), ஜ20, குவாட் ஆகிய அமைப்புகளிலும் இந்தியா அங்கம் வகிக்கிறது. இதனால், நமக்கு என்ன பலன் கிடைத்தது. இதுவரை நடந்த பிரிக்ஸ் மாநாடுகளால், எந்தவொரு ஒரு நன்மையும் கிடைத்ததாக எனக்கு தெரியவில்லை, இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜவினர் பதிலடி கொடுத்து வரும் நிலையில், சக காங்கிரஸ் மூத்த தலைரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூரும், ப.சிதம்பரத்தின் கருத்துக்கு எதிராக பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது; ‘பிரிக்ஸ் அமைப்பு வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு முக்கிய தளமாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பில் அங்கம் வகித்துள்ள 11 நாடுகள் மாறுபட்ட கருத்துகளின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பிரிக்ஸ் நாடுகள் உலக மக்கள் தொகையில் பெரும்பகுதியையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 41 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

டில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாடு, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்பதும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கின்றன. அதுமட்டுமில்லாமல், உலக அரங்கில் இந்தியாவின் ராஜதந்திர பலத்தை ஒன்று கூட்டும் விதமாக அமைந்துள்ளது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சசிதரூரின் பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் செயலுக்கு ஆதரவாக சசி தரூர் பேசுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக, ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை, காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வந்த நிலையில், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவான கருத்துக்களை சசி தரூர் பேசியிருந்தார்.

Source link