-நமது நிருபர் –
பிரதமர் மோடி மீதான வன்மத்தை கொட்டும் நோக்கத்துடன், பிரிக்ஸ் மாநாடுகளால் பயன் எதுவும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எது செய்தாலும் குறை சொல்லும் மனநிலையில் இருக்கிறார். அவரது அறிக்கை, பேட்டி, வலைதளப்பதிவுகள் எல்லாவற்றிலும் வெளிப்படுவது, பிரதமர் மோடி மீதான வன்மம் மட்டுமே. அப்படி ஒரு செயலை பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு மீண்டும் செய்திருக்கிறார், சிதம்பரம்.
பிரிக்ஸ் மாநாடுகளால் பயன் எதுவும் விளையவில்லை என்று பொத்தாம் பொதுவாக சிதம்பரம் கூறி இருக்கிறார். நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் டில்லியில், பிரிக்ஸ் மாநாடு நடக்கிறது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலர் வந்துள்ளனர்.அப்படி இருக்கும் நிலையில் சிதம்பரம் இப்படி உளறிக் கொட்டி இருப்பது காங்கிரஸ் கட்சியிலேயே, முக்கிய தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சசி தரூர் கூறியதாவது: முதலில் நாம் குளோபல் சவுத் எனப்படும் வளரும் நாடுகளுக்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறோம். வளரும் நாடுகளில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஆனால், அதில் இருந்து 11 முக்கிய நாடுகள் இணைந்துள்ளன. அவர்கள் கூட்டாக பல்வேறுபட்ட கருத்துகளையும் இந்த குறிப்பிட்ட நிகழ்வில் நாங்கள் தலைமை தாங்கும்நாடுகளின் வீச்சையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு உலகின் பெரும்பான்மையான மக்கள் தொகையையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 41 சதவீதத்தையும் வழங்குகின்றன.இது ஒரு சாதாரண விஷயும் அல்ல. உலகின் மற்ற நாடுகள் இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பிரிக்ஸ் மாநாடு நடத்துவது பெருமைக்குரிய விஷயம். இந்த நிகழ்வுக்குஉலகளாவிய மதிப்பு உள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல் அதிபர் மற்றும் பிரதமர் மட்டத்திலான சில பார்வையாளர்கள் உட்பட 12 நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசு தலைவர்கள் பங்கேற்பது இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட ராஜதந்திரத்தை ஒன்றிணைக்கும் ஆற்றலை காட்டுகிறது. இது உலக அரங்கில் தனக்குத்தானே ஒரு மதிப்பை கொண்டு உள்ளது.
மேலும், வேறு சில நடைமுறை விஷயங்களும் உள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் வளர்ந்து வருகிறது. ஆனால், பல வழிகளில் அது நமக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கான நமது ஏற்றுமதி குறைந்துள்ளது. அதே நேரத்தில் பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரித்து உள்ளது. பல்லாண்டு காலம் அணிசாரா இயக்கம் என்ற அமைப்பு உலக அளவில் செயல்பட்டது. இந்தியாவின் முதன்மையான சர்வதேச அமைப்பாக அணிசாரா இயக்கம் இருந்தது. அதன் விளைவுகள் என்ன? நமக்கு ஒரு அமைப்பு, குரல், நெட்வொர்க் தேவை. பிரிக்ஸ் அமைப்பு பயனற்றது என்றால் 40 நாடுகள் அதில் இணைவதற்காக முட்டி மோதிக் கொண்டிருப்பது ஏன்?இவ்வாறு சசி தரூர் கூறினார்.
புறக்கணிக்க முடியாது
காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது:
பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்கின்றனர். உலகின் மக்கள் தொகையில் பாதி பேர் பிரிக்ஸ் நாடுகளில் இருக்கின்றனர், ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு உலகின் பாதி மக்களை புறக்கணிக்க முடியாது. வரவிருக்கும் காலங்களில் இந்த உலகின் முக்கிய பொருளாதாரங்களாக திகழப்போகும் நாடுகள் இவைதான். அதேநேரத்தில் அவை சிறிய நாடுகள், மிகச்சிறிய தேசங்கள், வளரும் நாடுகள் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
பிரிக்ஸ் அமைப்பு,வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையேயான ஒரு பாலமாக இருக்கும். இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பதால், அதன் பொறுப்பு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சர்வதேச சமூகம் டில்லியை எதிர்பார்ப்புகளுடன் நோக்குகிறது. இந்த பொறுப்பை நிறைவேற்றவும், செயல்படுத்தவும் இந்தியா மீது உலகமே எதிர்பார்ப்புகளை கொண்டு உள்ளது.
பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை ஆட்சியில் இருக்கும் அரசின் ஒரு தனிப்பட்ட முயற்சியாக மட்டும் கருதாமல் தேசிய பொறுப்பாக கருதப்பட வேண்டும். நாட்டில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறோம். இந்த பிரதிநிதித்துவம் அரசுக்கு மட்டுமானது அல்ல. அது ஒட்டு மொத்த நாட்டிற்கும் இந்தியா முழுவதுற்கும் சொந்தமானது என்று எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பிரிக்ஸ் முக்கியமானது : ஆனந்த் சர்மா திட்டவட்டம்
காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறி உள்ளதாவது;
பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கிய நிறுவன உறுப்பினர்களில் நாமும் ஒருவர்.இதுபோன்ற மாநாடுகள் மிக முக்கியமானவை. கூடுதல் நாடுகள் இணைந்துள்ளதால் இந்த அமைப்பு மேலும் விரிவடைந்து உள்ளது. பிரிக்ஸ் தளம் மிக முக்கியமான தளம். சீனா, இந்தியா, ரஷ்யா,பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்த அமைப்பின் முக்கியமான கூட்டமைப்பாக காணப்படுகிறது. இந்த நாடுகள் அளிக்கு பங்களிப்பு மிக பெரியவை.பிரிக்ஸ் நாடுகள் உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதியையும், உலகின் மொத்த ஜிடிபியில் 49 சதவீதத்தையும் கடந்து பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும் உலகின் முக்கிய எரிசக்தி இருப்புகளான பெட்ரோலியம், எரிவாயு மற்றும் புதைவடிவ எரிபொருட்கள் ஆகியவற்றில் 47 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இந்த நாடுகளிடம் இருக்கின்றன.
இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.
இப்படி அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களே மாறான கருத்தை தெரிவித்திருப்பது, சிதம்பரம் கூறிய கருத்தால் கட்சிக்குள் ஏற்பட்ட கடும் அதிருப்தியை வெளிக்காட்டுவதாக உள்ளது.
