பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது பெருமைக்குரியது; காங்., மேலிடத்தை மீண்டும் கடுப்பேத்தும் சசி தரூர்!

– சிறப்பு நிருபர் –

‘பிரிக்ஸ் கூட்டமைப்பால் நம் நாட்டுக்கு என்ன பயன்?’ என, காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பிய நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., சசி தரூர், ”பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு நம் நாடு தலைமை தாங்குவது பெருமைக்குரிய விஷயம். இந்த அமைப்பு மூலம் பல பிரச்னைகளை எடுத்துரைக்க முடியும்,” என, தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவாக சசி தரூர் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது, காங்., மேலிடத்தை எரிச்சலடையச் செய்துள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பு, ‘பிரிக்ஸ்’ எனப்படுகிறது. 2024ல், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தன. இந்தாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தலைநகர் டில்லியில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிதம்பரம், ‘பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, குவாட் என, பல்வேறு கூட்டமைப்புகளில் நம் நாடு அங்கம் வகிக்கிறது. ஆனால், இதனால் எந்த பயனுமில்லை’ என்றார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு குறித்து, காங்., மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூர், கூறியதாவது: பிரிக்ஸ் கூட்டமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு நம் நாடு தலைமை தாங்குவது, மிகவும் பெருமைக்குரியது. இந்த அமைப்பு மூலம், ‘குளோபல் சவுத்’ எனப்படும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஆனால், இந்த அமைப்பில் வெறும், 11 நாடுகளே அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகள் பன்முகத்தன்மை கருத்துக்களை கூட்டாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பிரிக்ஸ் கூட்டமைப்பு உலகின் பெரும்பான்மையான மக்கள் தொகையையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 41 சதவீதத்தையும் வழங்குகின்றன.

சர்வதேச நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் நம் நாட்டுக்கு வருவது, மிகவும் பெருமைக்குரிய விஷயம். இது, குறிப்பிட்ட துாதரக ஈர்ப்பை காட்டுகிறது. இதற்கு, உலக அரங்கில் தனி மதிப்புண்டு. பிரிக்ஸ் கூட்டமைப்பால் நன்மைகள் மட்டுமே கிடைக்கின்றன என, சொல்ல முடியாது; சில சவால்களும் உள்ளன.

குறிப்பாக, உலகளாவிய பிரச்னைகளில் ஒருமித்த கருத்தை எட்டுவது கடினம். உதாரணத்துக்கு, சில மாதங்களுக்கு முன் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், ரஷ்யா – உக்ரைன் போர், ஈரான் – அமெரிக்கா போர் போன்றவற்றில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது, நம் துாதர்களுக்கு ஒரு உண்மையான சவாலாக இருக்கப் போகிறது.

மேலும், நடைமுறை சார்ந்த பிற விஷயங்களும் உள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே வர்த்தகம் வளர்ந்து வருகிறது. ஆனால், பல வழிகளில் அது நமக்கு நஷ்டத்தையே தருகிறது. பிரிக்ஸ் நாடுகளுக்கு நாம் செய்யும் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதே நேரத்தில், அங்கிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்கள் அதிகரித்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

அம்பலம்!
காங்கிரசின் உண்மையான மனநிலையை அக்கட்சியில் உள்ளவரே அம்பலப்படுத்துகிறார். ராகுல் உத்தரவுப்படியே, பிரிக்ஸ் மாநாட்டுக்கு எதிராக சிதம்பரம் கருத்து தெரிவித்தார். தற்போது அவரை சசி தரூர் அம்பலப்படுத்தி உள்ளார்.

பிரதீப் பண்டாரி; தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

Source link