பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஈழத்தமிழரான உமா குமரன் எம்.பி, அந்நாட்டின் வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற இணைச் செயலாளராக (Parliamentary Under-Secretary of State) நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரிட்டன் அரசில் அமைச்சர் பொறுப்பை ஏற்கும் முதல் பிரிட்டன் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
பிரிட்டனின் புதிய பிரதமரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) தனது புதிய அமைச்சரவைக் குழுவை அமைத்த போது, புதன்கிழமை மாலை இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. உமா குமரன், வெளியுறவுத் துறை இணைச் செயலாளருடன் சேர்த்து உதவி கொறடாவாகவும் (Assistant Whip) பணியாற்றுவார். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் முக்கிய பொறுப்பை இந்த அமைச்சகம் வகிக்கிறது.
தனது புதிய நியமனம் குறித்து உமா குமரன் வெளியிட்ட அறிக்கையில், வெளியுறவு, காமன்வெல்த், மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் பெருமையடைகிறேன். உலக அளவில் கொந்தளிப்பான சூழல் நிலவும் இக்காலத்தில், பிரிட்டனின் குரலும் சர்வதேசத் தலைமையையும் மிகவும் முக்கியமானது. நமது சிறந்த நாட்டிற்கு FCDO மூலம் சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மேலும் தனது உணர்வுப்பூர்வமான அனுபவத்தைப் பகிர்ந்த அவர், பிரிட்டனின் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த முதல் அமைச்சராக இந்தச் செய்தியைப் பகிர்வது எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 1980-களின் தொடக்கத்தில் கலவரங்களால் பாதிக்கப்பட்ட எனது பெற்றோருக்கு பிரிட்டனின் புகலிடமும், அவர்களின் வாழ்க்கையைச் சீரமைத்து வளர ஒரு வாய்ப்பையும் வழங்கியது. FCDO-வில் ராஜாவுக்கும் நாட்டிற்கும் சேவை செய்வதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், இலங்கையில் தமிழர்களின் மனித உரிமைகள் மற்றும் நீதி தொடர்பாக வெளியுறவுத் துறைக்கு உமா குமரன் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். செம்மணியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகள் சர்வதேசச் சட்டங்கள் மற்றும் தரநிலைகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதிசெய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார். தீவில் வாழும் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி நீதி கிடைக்கவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.
தற்போது செம்மணி அகழ்வாராய்ச்சியில் இதுவரை 471 மனித உடல்கள் (குழந்தைகள், சிறுவர்களின் உடல்கள் உட்பட) கண்டெடுக்கப்பட்டு, அது தீவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனிதப் புதைகுழி விசாரணையாக மாறியுள்ளது. மேலும், அங்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியக் குழுவிடம், உள்நாட்டு விசாரணை அமைப்புகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், சர்வதேச விசாரணையே தேவை என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி வரும் சூழலில், உமா குமரன் இந்த முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
1980-களின் தொடக்கத்தில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்களில் இருந்து தப்பித்து பிரித்தானியாவில் புகலிடம் பெற்ற ஈழத் தமிழ் தம்பதியருக்கு கிழக்கு லண்டனில் பிறந்தவர். ஹாரோ பகுதியில் வளர்ந்த இவர், லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தேசிய சுகாதாரப் பணியகத்தில் (NHS) பணியாற்றியதுடன், நாடாளுமன்ற ஆராய்ச்சியாளராகவும், C40 சிட்டீஸ் காலநிலை அமைப்பின் தூதரக மற்றும் சர்வதேச உறவுகளின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
தொழில் கட்சியின் முன்னாள் தலைவர் கெய்ர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராகப் பணியாற்றினார். ஜூலை 2024-இல் புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஸ்ட்ராட்ஃபோர்டு மற்றும் போ’ (Stratford and Bow) தொகுதியில் போட்டியிட்டு 11,634 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிரித்தானிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வான முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் ‘தமிழ் கார்டியன்’ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தமிழர்கள் நீதிகோரி நாடாளுமன்ற வாசலில் பலமுறை தங்கள் குரலை எழுப்பியுள்ளனர், ஆனால் நாடாளுமன்றத்தின் பச்சை இருக்கைகளில் (Green Benches) தமிழர்களுக்கு என சொந்தக் குரல் இருந்ததில்லை; அதை மாற்றுவதே எனது லட்சியம் என்று கூறியிருந்தார். அதைத் தற்போது தனது புதிய அமைச்சர் பதவி மூலமாகவும் நனவாக்கியுள்ளார்.
