பாரிஸ்: பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஜப்பானின் ஹினா அகேச்சியும் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சிந்துவுக்கு, அகேச்சி கடும் போட்டியாக திகழ்ந்தார். இறுதியில் 21-10,20-22,21-16 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டனின் பைனலுக்கு முதல்முறையாக சிந்து முன்னேறியுள்ளார். உலக தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் இவர், நாளை நடக்கும் பைனலில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், கொரியா நாட்டைச் சேர்ந்தவருமான அன் ஷே யங்கை எதிர்த்து விளையாட இருக்கிறார்.
இதுவரை இவர்கள் இருவரும் 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இவை அனைத்திலும் கொரிய வீராங்கனையே வெற்றி பெற்றுள்ளார். இந்தாண்டில் மட்டும் 2 முறை மோதியுள்ளனர். சிங்கப்பூர் ஓபனின் காலிறுதியிலும், இந்தோனேசியா ஓபனின் 2வது சுற்றிலும் அன் ஷே யங்கே ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
நாளை நடக்கும் போட்டியில் கொரிய வீராங்கனையை வீழ்த்திய முதல்முறையாக பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடைசியாக 1998ல் இந்தியாவின் அபர்னா போபத் இந்த பட்டத்தை வென்றிருந்தார். 2012ல் சாய்னா நேவால் 2ம் இடம் பிடித்திருந்தார்
