மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான ராக்கெட் தயார்; இஸ்ரோ தலைவர் நாராயணன்

சென்னை: சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் 42வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன், அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது; நம் நாட்டின் மிக முக்கிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை சோதனைகளுக்குப் பிறகு, ராக்கெட் தயார் செய்யப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ‘க்ரூ மாட்யூல்’, ‘க்ரூ எஸ்கேப் சிஸ்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. விண்கலத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், வீரர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இந்த அமைப்பு உதவும்.

இதன் உள்ளே வெப்பநிலை, காற்று அழுத்தம், ஈரப்பதம், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு அளவுகளை ஒழுங்குபடுத்த பிரத்யேக சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 3 வெற்றிகரமான ஆளில்லா சோதனை ஓட்டங்களுக்குப் பின்னரே, விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள்.

இந்திய விமானப்படை மூலம் விண்வெளி வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சந்திரயான் திட்டங்கள், மறுபயன்பாட்டு ராக்கெட் ஏவுதல் அமைப்பு தொழில்நுட்பம் குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source link