பிரேசில் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர் `எஸ்கேப்'

பிரேசிலியா: பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர் பிளாவியோ போல்சோனாரோ, 48, அமெரிக்காவுக்கு தப்பியோடியுள்ளதாக, அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா கூறியுள்ளார்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் லுாலா, 51.80 சதவீத ஓட்டுகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோவின் மகனும், செனட்டருமான பிளாவியோ போல்சோனாரோ தோல்வியடைந்தார்.

அதன் பின், பிளாவியோ அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் பரவின. இந்நிலையில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று தன் 81வது பிறந்தநாளைக் கொண்டாடிய அதிபர் லுாலா, அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் இடையே பேசினார்.

அப்போது, நாட்டைவிட்டு ரகசியமாக நழுவிச் செல்லும் எவரும் எதையோ மறைக்க முயல்கிறார்கள் என்றுதான் அர்த்தம்; பிரேசிலைவிட்டு வெளியேறும் இந்தச் செயல் மிகவும் வெட்கக்கேடானது, என, அவர் காட்டமாக தெரிவித்தார்.

அவர் நாட்டை விட்டு வெளியேறினாரா, இல்லையா என்ற சந்தேகத்திற்கு இடையே, பிளாவியோ போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா விசா வழங்கி, நாட்டிற்குள் நுழைய அனுமதி அளிக்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊழல், பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு வழக்குகள் தொடர்பாக பிரேசில் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வரும் பிளாவியோ, பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அமெரிக்கா இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கிடையே, தன் குடும்பத்தாருடன் பிளாவியோ, அமெரிக்காவின் புளோரிடாவுக்கு நேற்று சென்றடைந்துள்ளார்.

Source link