பிளாஸ்டிக் கூடையோடு அப்படியே தண்ணீரில் போட்டாரே..: அந்துமணி பதில்கள்

கே.விக்ரம் பரத், சென்னை:

மேட்டூர் அணையை, முதல்வர் விஜய் திறந்து வைத்துள்ளாரே?

ஜூன் 2 அன்றே திறக்க முடியாமல், இப்பவாவது திறக்க முடிந்ததே என நினைத்து சந்தோஷப்படுவோம். கடந்த முறை, இதே மேட்டூர் அணையைத் திறந்து வைத்து, பூவை போடச் சொன்ன போது, ‘போட்டு விடவா…’ எனக் கேட்டு, பிளாஸ்டிக் கூடையோடு அப்படியே தண்ணீரில் போட்டாரே, அப்போதைய முதல்வர் ஸ்டாலின்… அது பலருக்கும் நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!

எம்.பி.தினேஷ், கோவை:

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நேபாளம், வெளிநாடுகளின் உதவியைத் தவிர்த்துள்ளதே?

இந்தியா, சீனாவிலிருந்து மீட்புப் படையினர் உட்பட அனைத்து உதவிகளையும் நேபாளம் பெற்றுக் கொள்கிறது. மற்ற நாடுகளிலிருந்து நிதியையும், பொருளையும் மட்டும் பெற்றுக்கொள்கிறது. மற்ற நாட்டுப் படைகள் வந்தால், அவற்றை ஒருங்கிணைப்பதே பெரும் வேலையாக இருப்பதால் இந்த ஏற்பாடு.

மு.விஜயராணி, ராமநாதபுரம்:

ஆஹா… இனிமேல் என் கேள்விகளுக்கும் தினமலர் நாளிதழில் பதில் வருமா அந்துமணி சார்?

உண்டு… உண்டு…! இதோ பதில் வெளியாகி விட்டது; சந்தோஷம்தானே விஜயராணி?

எல்.உமை, சென்னை:

காவிரி பிரச்னையில், எம்.ஜி.ஆர்., போல செயல்பட வேண்டும் என, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் கூறியிருக்கிறாரே… த.வெ.க., தலைவர் விஜய், இதை கவனத்தில் கொள்ளலாமே?

விஸ்வநாதன், பெரும் கல்வி புரட்சியாளர். வறண்ட பூமியான வேலுாரில், மிகப் பெரிய வி.ஐ.டி., கல்வி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருபவர். எனது இனிய நண்பர். அவர் கூறும் யோசனையை, த.வெ.க., அரசு கவனிக்க வேண்டும்.

வி.கணேசன், சென்னை:

கேரளத்தில், சிறையிலிருந்து தப்பிவிட்டு, ஆதார் அட்டை கேட்டு மீண்டும் காவல் நிலையத்துக்கே வந்த கைதி பற்றி?

இந்த செய்தி, சினிமா இயக்குநர்கள் யார் கண்ணிலாவது பட்டால், அவர்களின் அடுத்த பட காமெடியில் சேர்த்து விடுவர். யோகி பாபுவோ, மொட்டை ராஜேந்திரனோ நடித்தால், சிறப்பாக, சிரிப்பாக எடுபடும்.

Source link