பீடி தர மறுத்த புலம்பெயர் தொழிலாளி அ*டித்துக் கொ*லை!

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் மண்டல் (வயது 25)என்பவர், சென்னை நொளம்பூர் கஜலட்சுமி நகர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று (05.09.2026) இரவு அபிஜித் மண்டல் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அபிஜித் மண்டலிடம் பீடி கேட்டுள்ளனர். 

அதற்கு தன்னிடம் பீடி இல்லை என அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கும் அபிஜித் மண்டலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் கையில் கிடைத்த கட்டை மற்றும் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஜித் மண்டலை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் நிலைகுலைந்த அபிஜித் மண்டல் கீழே விழுந்த நிலையிலும், அந்த கும்பல் அவரை தொடர்ந்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அபிஜித் மண்டல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நொளம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அபிஜித் மண்டலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், நொளம்பூர் பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link