பாட்னா: பீஹாரில், தொடர் கனமழையால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்ததால், 15 மாவட்டங்களைச் சேர்ந்த, 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதையடுத்து, பீஹாரில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கங்கை நதி உள்ளிட்ட பல ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்ததால், கரையோர பகுதிகளை ஒட்டியுள்ள பாட்னா, போஜ்பூர், சரண், வைஷாலி, பாஹல்பூர், பெகுசராய், லக்கிசராய், பூர்னியா உட்பட, 15 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும், 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசின் நிவாரண முகாம்களில் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பீஹாரில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
