புதிய புயல் சின்னம்: வட தமிழகம் நோக்கி வருவதாக ஏ.ஐ கணிப்பு; பிரதீப் ஜான் விளக்கம்

வங்கக்கடலில் நிலவி வந்த ‘அர்னாப்’ புயலின் தாக்கம் முடிவுக்கு வர உள்ள நிலையில், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மீண்டும் ஒரு புதிய புயல் சின்னம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தன் சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 

”நவம்பர் முதல் வாரத்தில் உருவாகக் கூடிய இந்த புதிய வானிலை அமைப்பு குறித்து பல்வேறு உலகளாவிய கணிப்பு முறைகள் வெவ்வேறான கணிப்புகளை வழங்கி வருகின்றன:

கூகுள் வெதர்நெக்ஸ்ட் (Google WeatherNext, ECMWF AI, GFS AI) போன்ற நவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், இந்த புதிய புயல் சின்னம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி மிக அருகில் வரக்கூடும் என்று சுட்டிக்காட்டுகின்றன. 

மறுபுறம், பாரம்பரிய இ.சி.எம்.டபிள்யூ.எஃப் என்செம்பிள் (ECMWF Ensemble) மாதிரியானது, இந்த புதிய புயல் கடந்த முறை ‘அர்னாப்’ புயல் கரையைக் கடந்த அதே பகுதியையொட்டி நகரும் என்று கணிக்கிறது. 

தற்போதைய ‘அர்னாப்’ புயல் முற்றிலும் மறைந்த பின்னரே, நவம்பர் முதல் வாரத்தில் உருவாகும் புதிய புயல் பற்றிய தெளிவான விவரங்கள் தெரியவரும். இந்த முறையும் ஏ.ஐ கணிப்புகள் சரியாக இருக்கிறதா அல்லது வழக்கமான கணிப்பு முறைகள் வெல்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வழக்கமாகவே நவம்பர் மாதத்தின் முதல் வாரம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசப் பகுதிக்கு நல்ல மழைக்கான வாய்ப்பை வழங்கும் காலமாகும்.” 

இவ்வாறு பிரதீப் ஜான் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Source link