வைகோவுடன் ஏற்பட்ட மனக்கசப்புகளை தவெக பரபரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் மனம் திறந்து பேசி உள்ளார்.
தமிழக அரசியலின் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர்களுள் ஒருவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பரப்புச் செயலாளருமான மூத்த அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத், சமீபத்திய சிறப்பு நேர்காணல் ஒன்றில் தனது அரசியல் பயணம், தலைவர்களுடனான மோதல்கள் மற்றும் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்துப் பல அதிரடி உண்மைகளை உடைத்துள்ளார்.
சுயமரியாதைதான் எனது மூலதனம்!
அரசியல் களத்தில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது குறித்துப் பேசிய நாஞ்சில் சம்பத், “சர்ச்சைகளில் சிக்குவது எனக்கு உடன்பாடானது அல்ல. மாவோ சொன்னது போல, மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. அதுதான் என் வாழ்க்கையிலும் நடக்கிறது. நான் 100 சதவீதம் சுயமரியாதைக்காரன். என் சுயமரியாதையையும், தமிழையும் நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். வறுமை, வெறுமை என எது வந்தாலும் தாங்குவேன். ஆனால், சுயமரியாதைக்குச் சோதனை வரும்போது நான் எதிர்வினை ஆற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறேன்” என்றார். மேலும், தான் எந்தவொரு அமைப்பின் சட்டதிட்டங்களையும் மீறுபவன் அல்ல என்றும், மிகவும் கட்டுப்பாடானவன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
9.30 மணி நேரப் பேச்சு: முறியடிக்கப்படாத சாதனை!
1989-ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், “1989 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்திற்குத் தரும் பட்டியலில் என் பெயரை கலைஞரே சேர்த்தார். கலைஞர் பங்கேற்ற ஒரு மேடையில், இரவு 10 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 7.30 மணி வரை எனத் தொடர்ந்து 9 அரை மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் குடிக்காமல் நான் பேசினேன். அந்த சாதனையைத் தமிழ்நாட்டில் இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. அப்படி ஒருவேளை முறியடித்தால் அது நானாகத்தான் இருக்க முடியும். ஆனால், இப்போது எனக்கு அந்த வாய்ப்புகள் இல்லையே என்ற ஏக்கம் உள்ளது” என்றார்.
வைகோவுக்குக் கோபம் வந்தது ஏன்?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுடன் ஏற்பட்ட விரிசல் மற்றும் நெல்லை மாநாட்டுச் சம்பவம் குறித்துப் பேசிய அவர்: “எந்த மேடையாக இருந்தாலும் நான் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். நெல்லை மாநாட்டில் மாநாட்டுத் தலைவராக எனக்குப் பேச வாய்ப்பு கிடைத்தது. வைகோ இருக்கும் மேடைகளில் நான் 5 நிமிடங்களுக்கு மேல் பேசியதே இல்லை. அன்று அவரிடம் எவ்வளவு நேரம் பேசலாம் எனக் கேட்டபோது, ‘உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். நான் அன்று 1 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசினேன். நான் பேசி முடித்ததும் அந்த மாநாட்டு மைதானத்தில் இருந்து 300 வாகனங்கள் கிளம்பிவிட்டன. இதைப் பார்த்து வைகோ கடுப்பாகிவிட்டார். ‘உன் அரசியல் எதிர்காலம் இன்றோடு முடிந்தது, உன்னை இருக்க விடமாட்டார்கள்’ என்று ஒரு பிரபலப் பத்திரிகையாளர் அப்போதே என்னிடம் எச்சரித்தார்” என்று குறிப்பிட்டார்.
திட்டமிடப்பட்ட விபத்தா? துரோகத்தை உடைத்த சம்பத்
நெல்லை மாநாடு முடிந்த அன்றே தனக்கு ஏற்பட்ட கார் விபத்து குறித்துப் பேசியவர், அது ஒரு திட்டமிடப்பட்ட விபத்தாக இருக்கலாம் என்ற தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். “நெல்லை மாநாடு முடிந்த அன்றிரவே அரியலூரில் ஒரு திருமணத்தை நடத்த நான் செல்ல வேண்டியிருந்தது. திருமங்கலம் அருகே கார் விபத்துக்குள்ளானது. நான் காரின் இடது பக்கம் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். நான் ரோட்டில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றபோது, மாநாடு முடித்துவிட்டு வைகோ அந்த வழியாக காரில் வந்தார். விபத்தை விவரித்தபோது, ‘அப்படியா சரி, போயிடுவீங்களா?’ என்று மட்டும் கேட்டுவிட்டு அவர் பாட்டிற்குச் சென்றுவிட்டார். ஒரு தலைவராக இருந்திருந்தால் என்னை வண்டியில் ஏற்றி மதுரையில் எங்காவது விட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அது எனக்குத் தாங்க முடியாத அதிர்ச்சியாக இருந்தது” என உருக்கமாகக் கூறினார்.
பதவிகளை நான் என்றுமே எதிர்பார்த்ததில்லை!
தன் மீது வைக்கப்படும் ‘அதிகாரப் பசி கொண்டவர்’ என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், தான் எப்போதும் பதவிகளை எதிர்பார்த்து அரசியல் செய்ததில்லை என்று கூறினார். “1989-லேயே நான் சீட் கேட்டிருந்தால் கலைஞர் எனக்குத் தந்திருப்பார். வைகோவிடம் இருந்தபோதும் என் வயதுடைய அன்பில் பொய்யாமொழி, சி.வி.எம்.பொன்மொழி போன்ற இளைஞரணி நிர்வாகிகளுக்கு சீட் கிடைத்தபோதும் நான் பதவிகளைக் கேட்கவில்லை. ஜெயலலிதா என்னை கட்சியில் சேர்த்தபோது, ‘ஒரு செல்லக் குழந்தையின் அத்துமீறல் கூட என்னிடத்தில் இருக்காது’ என்றுதான் எழுதிக் கொடுத்தேன். நான் ஓடுகிற நதியைப் போல, வீசுகிற காற்றைப் போல சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன்” என்று கூறி நேர்காணலை நிறைவு செய்தார்.
Source link
