ரேஷன் கார்டுகள் அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகளும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அதேபோல, ரேஷன் கார்டில் பல வகைகள் உள்ளன. குடும்ப வருமானம் போன்ற அடிப்படை அளவுகோல்களை வைத்து ரேஷன் கார்டுகள் பிரிக்கப்படுகின்றன. ரேஷன் கார்டின் வகைகளைப் பொறுத்து ரேஷன் அட்டைதார்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
இந்தியாவில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக, இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 38,438 ரேஷன் கடைகளும், சுமார் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களும் உள்ளனர்.
அதன்படி ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல் 500 கிராம் சர்க்கரையும், துவரம் பருப்பு 1 கிலோவும், 1 லிட்டர் பாமாயில் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது.
