உயிர்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து பல ஆயிரம் கோடி லஞ்ச ஊழலுக்கு துணைபோனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் சட்டமன்ற முடக்கத்தை கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினருடன் பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு இன்று அறிவித்தார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் பல இடங்களில் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. அதன்மூலம் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் நோயாளிகள் பயன்படுத்த பிற மாநிலம் மற்றும் பல நாடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அந்த மருந்துகள் தரமானதா அல்லது போலியானதா? என்று ஆய்வு செய்யகூடிய மருத்துவத்துறையின் அலட்சியத்தாலும், ஊழல் அதிகாரிகள் மற்றும் ஊழல் அரசியல்வாதிகளின் தான்தோன்றிதனத்தாலும் Drugs மாபியாக்களின் கேந்திரமாக புதுச்சேரி விளங்கி வருகிறது.
கடந்த காலங்களில் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்து அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவத்துறை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் அதில் தொடர்புடைய ஊழல் அரசியல்வாதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல புதுச்சேரி, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு ஆகிய பல இடங்களில் போலி மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவி பிரபல மருந்து மாத்திரை தயாரிப்பு கம்பெனியான சன் பார்மா மற்றும் பல முக்கிய மருந்து கம்பெனிகள் தயாரிக்கும் மருந்து மாத்திரைகளை அந்தந்த கம்பெனிகள் பெயரில் போலியாக மருந்துகளை தயாரித்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி நோயாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
இதை அறிந்த சன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கையில் இறங்கி பல கோடி ரூபாய் பெருமானம் உள்ள போலி மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்து அந்த போலி மருந்து உற்பத்தி தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதாக கூறப்பட்டது. இதில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் பல கோடி ரூபாய் கையூட்டு பெற்றது வெளிச்சத்திற்கு வந்தும் அவர்களை விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தாமல் சிபிஐ விசாரணை என்ற பெயரில் விசாரணையை முடக்கிவைத்து அரசியல்வாதிகளை காப்பாற்றி வருகிறார்கள்.
சமீபத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற மருந்து மாத்திரைகள் பிடிப்பட்ட சம்பவத்தில் தமிழக போலீசார் விசாரணையில் அந்த மருந்து மாத்திரைகள் எங்கு இருந்து கடத்தப்பட்டது என்று விசாரித்ததில் அவை புதுச்சேரியிலிருந்து தயாரித்து அனுப்பியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அது புதுச்சேரி குரும்பப்பட்டில் இயங்கி வரும் ஒரு மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து தயாரித்து கொண்டு வரப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து மாத்திரைகளும் பிரபல மருந்து கம்பெனிகள் தயாரிக்கும் மருந்துகளின் போலி மருந்து மாத்திரைகள் என்று கண்டறியப்பட்டு அந்த மருந்து தயாரிப்பு தொழிற்சாலையின் உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இப்படி இந்தியாவையே உலுக்கும் விதமாக போலி மருந்து மாத்திரைகள் தயாரிக்கும் மாபியாக்களின் கேந்திரமாக புதுச்சேரி விளங்குவதற்கு யார் யாரெல்லாம் காரணம் என்ற கேள்வி பூதாகரமாக மாறி உள்ளது.
இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் புதுச்சேரி அரசும், மருத்துவத்துறையும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மக்களின் உயிர்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்யும் மருந்து கம்பெனிகளை ஆய்வுக்கு உட்படுத்தாமலும், அந்த தொழிற்சாலைகள் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எதையும் பாராமல் மாத மாமூல், வருட மாமூல் என்று வசூல் வேட்டை நடத்தி மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு (NOC) தடை இல்லா சான்றிதழ் வழங்கி அதிகாரிகள் லஞ்ச ஊழலில் திளைத்து கொண்டிருக்கிறார்கள்
இதில் மாசு கட்டுபாடு வாரியம் வருடத்திற்கு ஒரு முறையாவது சரியாக ஆய்வு செய்து அங்கு தயாரிக்ககூடிய மருந்து மாத்திரைகள் எப்படிப்பட்டது. எந்தெந்த பெயரில் மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது என்று ஆய்வுக்கு உட்படுத்தி அது முறையாக தயாரிக்கப்படுகிறதா என்பதை அறிந்து (NOC) தடை இல்லா சான்றிதழ், Pollution Certificate வழங்கியிருக்க வேண்டும். அவர்களும் இந்த போலி மருந்து தயாரிப்புக்கு துணை போய் உள்ளார்கள் என்று தெரிகிறது.
அதேநேரத்தில் இந்தியாவிலேயே சிறிய நிலபரப்பில் அதிக மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி மிக வளர்ச்சியடைந்த மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது. இங்கு ஜிப்மர் உள்ளிட்ட எட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அதிகம் உள்ள நம் புதுச்சேரி மாநிலத்தில் இப்படிப்பட்ட போலி மருந்து மாத்திரைகள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருப்பது மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
புதுச்சேரியில் செயல்படும் அனைத்து மருந்து கடைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் மருந்து மாத்திரைகள் தரமானதா? காலாவதியானதா என்று ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த போலி மருந்து மாத்திரைகள் பற்றி வெளி மாநில போலீசார் எடுத்த நடவடிக்கைக்கு பிறகுதான் புதுச்சேரி மருந்து கட்டுப்பாடு துறையின் செயல்பாடுகளின் அவலட்சணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மருத்துவத்துறையின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கக்கூடிய மருந்து கட்டுப்பாடு துறையில் ஒரே ஒரு நிரந்தர ஊழியராக ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் என்பவர் மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வந்து இருக்கிறார். இவரின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் (Contract) தற்காலிக ஊழியர்கள் சிலர் பணியாற்றி வந்திருக்கிறார்கள். இதில் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆய்வாளர் அனந்தகிருஷ்ணனுக்கு மேலதிகாரியாக பாலசுப்பிரமணியம் என்பவர் Assistant Commissioner, Drugs என்ற பதவியில் பணியில் இருந்து இருக்கிறார்.
அவர் சில காரணங்களுக்கு இடையூறாக இருக்கிறார் என்று கருதி அவரை மதர் தெரேசா கல்லூரிக்கு இடமாற்றம் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு மருந்து கட்டுப்பாட்டு துறையில் இருந்தே மாத ஊதியம் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த Assistant Commissioner, Drugs பாலசுப்பிரமணியம் அவர்கள் மாற்றப்பட்ட காலத்திலிருந்து இந்த ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையின்கீழ் இந்த மருந்து கட்டுப்பாட்டு துறை அவர் சஸ்பெண்ட் ஆகும் வரை இயங்கி வந்திருக்கிறது. இதுசம்பந்தமாக முழு விசாரணை நடத்தப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்று பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதை முறையாக விசாரித்து ஆய்வு செய்ய வேண்டிய மருத்துவத்துறை செயலாளர் அவர்கள், ஒரு செய்திகுறிப்பில் கீழ்கண்டவாறு கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. அதாவது, “புதுச்சேரியில் பல மருந்து நிறுவனங்கள் சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தன. ஆனால் இந்த மருந்து கட்டுபாடு அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. அவரின் அலட்சியத்தால் இது தொடர்ந்தது. உரிமம் வழங்கும் அதிகாரியான இவர் சட்டவிரோத உற்பத்தி நிலையங்கள் குறித்து முன்னதாக அறிந்திருக்க வேண்டும். அவற்றை தடுக்க இந்த அதிகாரி தவறிவிட்டார். மேலும் களஆய்வும் செய்யவில்லை.
எனவே இதற்கு அதிகாரியான அனந்தகிருஷ்ணன் பணிநீக்கம் செய்யப்படுகிறார்” என்று சாதாரணமாக கூறியிருக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் இவ்வளவு முறைகேடுகளுக்கும், ஊழலுக்கு இவர் ஒருவர் மட்டும் தான் காரணம், இதற்கு வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்பது போல் சித்தரித்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். இதை எல்லாம் கண்காணிக்க கூடிய அரசும், அரசு துறையும் தற்போது செயல் இழந்து காணப்படுகிறது.
புதுச்சேரி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிந்து அமைச்சரவை பதவியேற்று சட்டமன்ற கூட்டங்கள் நடைபெற்று பட்ஜெட் கூட்டதொடரும் நடைபெற்று கொண்டிருக்கிறது ஆனால் புதுச்சேரியில் அமைச்சரவை பதவியேற்று ஏறக்குறைய 3 மாதங்கள் முடிவுறும் நிலையில் சபாநாயகர் தேர்தல் மற்றும் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் அனைத்து அரசு துறைகளும் செயலிழந்து காணப்படுகிறது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் திண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆகையால் ஆளுநர் அவர்களும், முதலமைச்சர் அவர்களும் இதனில் தலையிட்டு மேற்கண்ட ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு உயர்அதிகாரிகள் மற்றும் இதற்கு துணைபோன அரசியல்வாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனைக்கு உட்படுத்துவதுடன், சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் மற்றும் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கி அரசு நிர்வாகத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, உயிர்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து பல ஆயிரம் கோடி லஞ்ச ஊழலுக்கு துணைபோனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் சட்டமன்ற முடக்கத்தை கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினருடன் பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
