சென்னை: ”கடந்த ஆட்சியில் பணி நீட்டிப்பு வழங்கியவர்களை, வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னையில் , தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஐந்து இளம் டாக்டர்கள் உட்பட, 20 பேருக்கு விருதுகள் வழங்கி, அமைச்சர் அருண்ராஜ் கவுரவித்தார். பின், அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: தமிழக சுகாதாரத் துறையில் பல மா ற்றங்களை செய்துள்ளோம். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில், மருந்து கொள்முதல் நடவடிக்கைகள் அனைத்தும் ஒருமுகமாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
அதேபோல், கடந்த ஆட்சியில், 10, 15 பேர் வரை பணி ஓய்வு பெற்றாலும், பணி நீட்டிப்பு அடிப்படையில், அப்பதவியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு புதிய அலுவலர்களை நியமித்துள்ளோம்.தனியார் மருத்துவ கல்லுாரிகளில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த, இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின், அமைச்சர் அருண்ராஜ் அளித்த பேட்டி: முதல்வர் அலுவலகம் இடமாறுவதால், எவ்வித அலுவல் பணிகளும் பாதிக்காது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மத்திய அரசு தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி, மாநில அரசுக்கு நெருக்கடி தர முயற்சிக்கிறது. மாநில உரிமைகளுக்கு உரிய மதிப்பை மத்திய அரசு தர வேண்டும். இதை நிச்சயம் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
