புதுடில்லி: ” மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்ததன் மூலம் பெண்கள் விரோத கட்சி என்ற அவப்பெயர் காங்கிரஸ் மீது விழுந்துள்ளது. இதனை அக்கட்சியால் எப்போதும் மாற்ற முடியாது, ” என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: அரசியல் காரணம் பெண்கள் உரிமைகளை மறுக்கும் மனப்பான்மை கொண்டுள்ள காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், தங்களிடம் இருந்த பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறுவதை தடுத்து விட்டன. நாட்டின் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைக் கண்டு துயரம் அடைகிறோம்.
லோக்சபாவிலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு குரல் கொடுக்கவும், முழுமையான சட்ட நடவடிக்கைகளிலும், நாட்டை நிர்வாகம் செய்யும் நடைமுறைகளிலும், கொள்கை முடிவு எடுக்கும் வழிமுறைகளில் பங்கேற்க பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த மிக முக்கியமான மசோதா தோல்வியடைந்தது கவலையளிக்கிறது.அதனால் தான் எங்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் வேறு சில கட்சிகளும் நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனால், அக்கட்சிகள் பெண்களின் கோபத்தை சந்திக்க நேரிடும். காங்கிரஸ் மீது பெண் விரோத கட்சி என்ற பழி விழுந்துள்ளது. இந்த அவப்பெயர் என்றும் நீங்காது. பெண்களின் உரிமைகளை மறுப்பதை கொண்டாடுவது பாவம். பெண்களுக்கு உரிமைகளை வழங்காமல் இருப்பதே ஒரு வெற்றி என்று எதிர்க்கட்சியினர் கருதுகிறார்கள்.
லோக்சபாவிலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது நமது கடமையாகும். அதை நிச்சயம் வழங்க வேண்டும். மசோதாவை தோற்கடித்த பிறகு எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் தங்களின் உண்மையான குணத்தை வெளிப்படுத்திவிட்டனர். இனி எந்த சமாதானமும் எடுபடாது. பெண்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அழித்துவிட்டன.
சில காங்கிரஸ் எம்பிக்கள் என்னை சந்தித்தனர். மத்திய அரசின் எண்ணம் நல்லது என தெரிவித்தனர். ஆனால், ராகுல் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. யாராலும் அவரை மாற்ற முடியவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும் என்றனர். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
