புதுமையும் போராட்டமும் நிறைந்ததே டி.வி.ஆரின் வாழ்க்கை பயணம்; பவள விழாவில் வீடியோ வெளியீடு

நமது நிருபர்

சென்னையில் நடந்த பவள விழா நிகழ்ச்சியில், ‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை பயணம் குறித்த சிறப்பு காணொளி ஒளிபரப்பப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது: ஒரு சாதாரண பத்திரிகையாளராய், ஒரு மாநிலத்தின் வரைபடத்தையே மாற்ற முடியுமா? ஒரு சமஸ்தான அரசையே பகைத்துக் கொண்டு, நாதளிதழ் நடத்த முடியுமா? பொருளாதார இழப்புகளை பொருட்படுத்தாமல், இதழியல் துறையில் அடுத்தடுத்து புதுமைகளை புகுத்த முடியுமா? முடியும் என்றுதான் கூறுகிறது டி.வி.ராமசுப்பையரின் வாழ்க்கை வரலாறு.

போராட்டங்கள்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த, தழுவிய மகாதேவர் கோவில் பகுதியில், 1908ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார் டி.வி.ராமசுப்பையர். ராமலிங்க அய்யர், பகவதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர், அவரது ஏழு வயதில், வேங்கடபதி அய்யர் – ஆவுடையம்மாள் தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். இளமையிலேயே, காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட டி.வி.ஆர்., தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காக, பல்வேறு பணிகளில் ஈடுபட தொடங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டார். 1946ம் ஆண்டு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், கட்டாய மற்றும் இலவச ஆரம்பக் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.

பள்ளிகளுக்கு கட்டடம்

ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய கல்வியும், ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்குவதும், இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம். கல்விதான் ஒரு சமூகத்தை அடுத்தகட்டத்திற்கு அழைத்து செல்லும் என்பதை உணர்ந்த, டி.வி.ஆர்., கட்டாய கல்வி திட்டத்தை, மக்களிடையே கொண்டு செல்லும் பணிகளில், முழுமூச்சாக இறங்கினார். அப்போதைய கல்வி இயக்குனரான ஏ.என்.தம்பியுடன் இணைந்து, பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்து, கல்வியின் முக்கியத்தை மக்களிடம் எடுத்துரைத்தார். இவரது முயற்சியால், வெறும் மூன்று மாதங்களில், 50 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதுவரை சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு, முதல் முறையாக நாகர்கோவில் நடத்தவும் காரணமாக அமைந்தார்.

பத்திரிகையின் பலம்

இப்படி சிறு வயது முதல் பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டார் டி.வி.ஆர்., பொதுக் காரியங்களை தீவிரமாக செயல்படுத்த துணிவும், முன்யோசனையும், திட்டமிடல் தன்மையும் மட்டும் இருந்தால் மட்டும் போதாது. அவர்களிடம் ஏதாவது ஒரு பதவி இருக்க வேண்டும் அல்லது ஒரு பத்திரிகையின் பலம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

எனவே, நாகர்கோவில் நகரசபை தேர்தலில், 1947ம் ஆண்டு அவர் போட்டியிட்டார். அதிகார வேட்கைக்காகவும், அதன் வழியே கிடைக்கும் புகழுக்காகவும் அவர் தேர்தலை சந்திக்கவில்லை என்பதை, அந்த சமயத்தில் அனைவரும் அறிந்திருந்தனர். ஏனென்றால், நகரசபை தேர்தலில், வெற்றிப் பெற்றால் என்ன புகழ் கிடைக்குமோ, எந்த அளவு மரியாதை கிடைக்குமா, அவை அனைத்தையும் டி.ஆர்.ஆர்., ஏற்கனவே பெற்றிருந்தார்.

மக்களுக்கான திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அவர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில், அவரது நண்பர் ஒருவர், நாகர்கோவில் நகரசபையில் உறுப்பினராக இருந்தார். அவர் செய்த துரோகம் காரணமாக, டி.வி.ராமசுப்பையரால் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது. நாகர்கோவில் நகரசபை தேர்தலை தொடர்ந்து, திருவிதாங்கூர் சட்டசபை உறுப்பினர் பதவிக்கும் டி.வி.ஆர்., போட்டியிட்டார்; அந்த தேர்தலிலும் வெற்றி கிடைக்கவில்லை. எனவே, பத்திரிகை தொடங்கி, மக்களுக்காக குரல் கொடுக்க முடிவெடுத்தார்.

இது குறித்து தன் நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தார். ஆனால், அவர்கள் அனைவரும், பத்திரிகை நடத்தினால் நஷ்டம்தான் ஏற்படும் என்றும், இந்த முடிவை கைவிடும்படியும் அறிவுறுத்தினர்.

இதற்காக, பத்திரிகை நடத்தி, யார் யாரெல்லாம் காணாமல் போயிருக்கின்றனர் என்பதையும், அவர்கள் பட்டியலிட்டனர். நாகர்கோவிலில் சிதம்பரம் பிள்ளை என்பவர், ‘தமிழன்’ என்ற வார இதழை தொடங்கினார். ஆனால், போதிய ஆதரவு இல்லாததாலும், நிதி நெருக்கடிகளாலும், இரண்டு, மூன்று ஆண்டுகளிலேயே, அந்த இதழை நிறுத்தி விட்டார். மார்ஷல் நேசமணி, ‘திங்கள்’ என்ற வார இதழையும், மகாலிங்க முதலியார், ‘தேவி’ என்ற வார இதழையும் தொடங்கி, பாதியிலேயே கைவிட்டிருந்தனர்.

மாத இதழ், வார இதழ்

இதையெல்லாம், டி.வி.ஆரின் நண்பர்கள் சுட்டிக்காட்டினர். ஆனால், இந்த எதிர்மறையான கருத்துகள் எதையும், டி.விஆர்., காதில் போட்டுக்கொள்ளவில்லை. பத்திரிகை ஒன்றை தொடங்குவது என்ற முடிவில் திடமாக இருந்தார். அதுவும், மாத இதழ், வார இதழ் என இல்லாமல், எடுத்த எடுப்பிலேயே, அவர் தினசரி பத்திரிகையை தொடங்க முடிவு எடுத்தார்.வார இதழை நடத்துவது, பலருக்கு பெரும்பாடாக உள்ள நிலையில், நாளிதழை தொடங்க போவதாக, டி.வி.ஆர். அறிவித்தது, அவர் நண்பர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாளிதழ் நடத்தினால் நஷ்டம் ஏற்படும் என்பதை, டி.வி.ஆரும் அறிந்தே இருந்தார்.

எனவே, நஷ்டம் இருந்தால், எவ்வளவு நஷ்டம் ஏற்படும்; அது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்; அதை சமாளிக்க தேவையான நிதி பின்புலம் தம்மிடம் உள்ளதா என்பதை, அவர் கணக்கிட்டார். மாதத்திற்கு அதிகபட்சமாக, 1,000 ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்று தோன்றியது.இதையே ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், 60,000 ரூபாய். இந்த ஐந்தாண்டுகளுக்கு உள்ளாக பத்திரிகை நல்ல நிலையை அடைந்து விடும் என்று டி.வி.ஆர்., நம்பினார். அந்த சமயத்தில், குழந்தைசாமி என்பவர் தனது நண்பர்களுடன், டி.வி.ஆரை சந்திக்க சென்றார்.

தினச்செய்தி

பின்னாளில், ‘தினமலர்’ நாளிதழ் தொடங்கப்பட்டபோது, அதன் முதல் செய்தி ஆசிரியராக இவர்தான் பொறுப்பேற்றார். குழந்தைசாமி உள்ளிட்டோருடன், டி.வி.ஆர்., கலந்துரையாடியபோது, நாளிதழ் குறித்தும் பேச்சு சென்றது. அப்போது, நாளிதழ் தொடங்க, அச்சகம் தேவைப்படுமே என்று டி.வி.ஆர்., கேட்டார். அதற்கு குழந்தைசாமி, இவ்வாறு பதிலளித்தார். ‘சென்னையில் நாகராஜன் என்பவர், ‘தினச்செய்தி’ என்ற பெயரில் நாளிதழ் நடத்தி வந்தார். ஆனால், பெரும் கடன் சுமையால், அவரால் அதை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. எனவே, அவரது அச்சகத்தை இந்தியன் வங்கி முடக்கி விட்டது. கொஞ்சம் முயன்றால், தினச்செய்தி அச்சகத்தை மீட்டு, நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றார்.

இந்த யோசனை, டி.வி.ஆருக்கு பிடித்திருந்தது. எனவே, குழந்தைசாமியுடன் சென்னைக்கு பயணித்த அவர், ‘தினமணி’ முன்னாள் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கத்தை சந்தித்தார். நாளிதழ் ஒன்றை தொடங்குவதில் தனக்குள்ள ஆர்வத்தையும், அதற்கான அவசியத்தையும் விரிவாக எடுத்துக் கூறினார். டி.வி.ஆரின் நோக்கம் அவரை மிகவும் கவர்ந்தது.

எனவே, இந்தியன் வங்கி நிர்வாகிக்கு கடிதம் எழுதிக் கொடுத்தார் டி.எஸ்.சொக்கலிங்கம். ‘மிக உயர்ந்த பணிக்காக, இவர்கள் பத்திரிகை தொடங்க உள்ளனர். எனவே, உங்களிடம் உள்ள தினச்செய்தி அச்சகத்தை, வட்டி எதுவும் வாங்காமல் கொடுத்து உதவுங்கள்’ என்று, அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.அதேபோல், காமராஜரும் கடிதம் எழுதிக் கொடுத்தார். இந்த கடிதங்களை, மதுரைக்கு எடுத்து சென்று, வங்கி நிர்வாகிகளை டி.வி.ஆர்., சந்தித்தார்; அவர்கள் மறுபேச்சே பேசவில்லை. அச்சகத்தை கொடுத்து விட்டனர்.

கடன்

அந்த சமயத்தில், அந்த அச்சகத்தின் மீது, 18,000 ரூபாய்க்கு மேலாக கடன் இருந்தது. அதை மட்டுமே டி.வி.ஆர்., அடைக்க வேண்டி இருந்தது. இவ்வாறு, அச்சகமும், அச்சக பொருட்களும் கைக்கு வந்து சேர்ந்தன. இனி பத்திரிகை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இன்று, தமிழகத்தின் முதன்மையான பத்திரிகைகளில் ஒன்றாக உள்ள தினமலர், முதன்முதலில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில்தான் தொடங்கப்பட்டது என்பது, பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.

திருவனந்தபுரத்தில் உள்ள வஞ்சியூர் நீதிமன்றத்திற்கு எதிரே இடம் ஒன்று இருந்தது. அதை முன்பணம் கொடுத்து, டி.வி.ஆர்., வாடகைக்கு வாங்கினார். அச்சக இயந்திரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டு, அங்கே நிறுவப்பட்டன. எல்லா பணிகளும் முடிவடைந்து விட்டன.

இனி பத்திரிகைக்கு பெயர் மட்டும் சூட்ட வேண்டும். புதிதாக தொடங்க உள்ள நாளிதழுக்கு, பலரும் பல பெயர்களை முன்மொழிந்தனர். ஆனால், அது எதுவும் டி.வி.ஆருக்கு பிடிக்கவில்லை. அப்போது, தமிழ் ஆசிரியரும், சுசீந்திரம் தசாவதானி என அழைக்கப்பட்டவருமான ஆறுமுகம் பிள்ளை, ‘பொன்மலர்’ என்ற பெயரை பரிந்துரைத்தார்.

ஆனால், பெயரிலேயே அது தினசரி பத்திரிகை என தெரிய வேண்டும் என்று டி.வி.ஆர்., விரும்பினார். எனவே, ‘தினமலர்’ என இறுதி செய்யப்பட்டது. அந்த சமயத்தில், கேசவன் என்பவர், திருவிதாங்கூரின் முதல்வராக இருந்தார். அவரை சென்று சந்தித்த டி.வி.ஆர்., தன் புதிய பத்திரிகையை, தாங்கள்தான் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், கேரள கவுபதி என்ற மலையாள நாளிதழ்களின் உரிமையாளர்களில் ஒருவராக அவர் இருந்ததால், ‘தினமலர்’ நாளிதழை தொடங்கி வைக்க மறுத்து விட்டார். 1951ம் ஆண்டு, செப்டம்பர் 6ம் தேதி, திருவனந்தபுரத்தில், ‘தினமலர்’ நாளிதழ் தொடக்க விழா நடந்தது. தமிழறிஞரும், தமிழின் முதல் பெரிய அகாரதியை உருவாக்கியவருமான, வையாபுரி பிள்ளை, அதை தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில், ‘தினமலர்’ நாளிதழின் நிறுவனரும், ஆசிரியருமான டி.வி.ஆர்., சிறிய உரை ஒன்றை நிகழ்த்தினார். ‘பத்திரிகை ஒன்றை தொடங்க வேண்டும் என்பது, சிறுவயது முதலே, என் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு தற்போது வாய்த்துள்ளது. இந்த தினமலர் நாளிதழ், எந்த கட்சியையும் சார்ந்தது அல்ல. எந்த கட்சியில் உள்ளவர்களும் தங்கள் கருத்துகளை, தினமலர் வழியே தெரிவிக்கலாம். மலையாளிகள் மற்றும் தமிழர்களிடையே உறவை மேம்படுத்த, இந்த நாளிதழ் பாடுபடும். அதேசமயம், தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுதான் ‘தினமலர்’ நோக்கங்களில், முதன்மையானது’ என்று டி.வி.ஆர்., விளக்கம் அளித்தார்.

டி.வி.ஆருக்கு டில்லியில் இருந்து வாழ்த்து செய்தி அளித்த ராஜாஜி, ‘இன்றைய சூழலில், தினசரி பத்திரிகையை நடத்துவது மிகவும் கடினம். ஆனால், தங்களின் நிதி ஏற்பாடு எத்தகைய பதற்றத்தையும் அழிக்காத வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். பத்திரிகை நடத்த தாங்கள் கொண்டுள்ள கொள்கைகள், மிகவும் சிறப்பானவை, வாழ்த்துகள்’ என தெரிவித்திருந்தார். தொடக்கத்தில், ‘தினமலர்’ நாளிதழை நடத்துவதில், டி.வி.ஆருக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. மலையாளிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தமிழில் அச்சு கோர்ப்பவர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

அப்படியே கிடைத்தாலும், அவர்கள் தினசரி பத்திரிகைகளில் பணியாற்றி அனுபவம் குறைவாகவே இருந்தது. எனவே, அச்சு கோர்க்கும் பணிகளில் மட்டும், மலையாள பத்திரிகைகளை காட்டிலும், இரண்டு மடங்கு செலவானது. பத்திரிகைக்கான காகித விலையும் அதிகமாகவே இருந்தது.

இருந்தபோதும், திருவிதாங்கூர், கொச்சி போன்ற பகுதிகளில், மலையாள பத்திரிகைகள், ஒன்றே காலனாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ‘தினமலர்’ நாளிதழ் ஓரணாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. தினமலர் விற்பனை குறித்து, டி.வி.ஆருக்கு ஒரு கணக்கு இருந்தது. திருவிதாங்கூரில் அந்த சமயத்தில், 15 லட்சம் தமிழர்கள் வசித்தனர். ஐந்து பேருக்கு ஒரு வீடு என்று கொண்டால், மொத்தம் 3 லட்சம் தமிழ் குடும்பங்கள் இருந்தன.

30,000 நாளிதழ்

இவற்றில், 10 குடும்பங்கள் சேர்ந்து, ஒரு ‘தினமலர்’ நாளிதழை வாங்கினாலும் கூட, மிக எளிதாக, 30,000 நாளிதழ் விற்கும் என, டி.வி.ஆர்., கருதினார். நிதி சிக்கல் இருந்தபோதும், நாளிதழின் தரத்தில் டி.வி.ஆர்., எந்த சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை. பி.டி.ஐ., மற்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனங்களின் உதவியுடன், மதுரை பத்திரிகைகளுக்கு முன்னதாகவே, பல செய்திகளை, ‘தினமலர்’ வழங்கி வந்தது.

இத்தனைக்கும், அந்த சமயத்தில் திருவனந்தபுரம் அலுவலகத்தில், 40 பேர் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கன்னியாகுமரி, மெட்ராஸ் மாகாணத்துடன், அதாவது, தமிழகத்துடன் இணைந்திருக்கவில்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே அது இருந்து வந்தது.

கன்னியாகுமரியை தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த போராட்டங்களின் போர்வாளாக விளங்கிய பத்திரிகை என்றால், அது ‘தினமலர்’ தான். கன்னியாகுமரி ஏன் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்பதற்கான விளக்கங்களையும், நியாயங்களையும் தினமலர் வலுவாக முன்வைத்தது. போராட்டம் தொடர்பான செய்திகளையும் உடனுக்குடன் வெளியிட்டது.

இதனால், கன்னியாகுமரி இணைப்பு போராட்டம், புதிய பாய்ச்சலை அடைந்தது. எனவே, தினமலருக்கு, கேரளாவின் ஆளும் கட்சியினர் தொடர் நெருக்கடிகளை கொடுக்க தொடங்கினர். அரசு சார்பில், தினமலருக்கு வழங்கி வந்த விளம்பரங்களை நிறுத்தி, பொருளாதார நெருக்கடியை கொடுத்தனர்.

இதுகுறித்து, சட்டசபையிலும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், ‘தினமலர்’ நாளிதழக்கு, அரசின் விளம்பரம் நிறுத்தப்பட்டது குறித்து, தனக்கு எதுவும் தெரியாது என, கேரள முதல்வர் பட்டம் தாணுபிள்ளை தெரிவித்து விட்டார்.

சென்னையில் இருந்து செயல்பட்டு வந்த பல ஆங்கில பத்திரிகைகளும், கன்னியாகுமரி போராட்டத்துக்கு எதிராகவே செய்திகளை வெளியிட்டன. இதனால், ஆத்திரமடைந்த கன்னியாகுமரி மக்கள், பிரபல நாளிதழ் ஒன்றை கட்டுக்கட்டாக வாங்கி வந்து, அதை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுபுறம், கன்னியாகுமரி பகுதியில் உள்ளவர்கள், ‘தினமலர்’ நாளிதழை கையில் வைத்திருந்தாலே, போலீசார் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேற தொடங்கின. மேலும், ‘தினமலர்’ ஆசிரியரான டி.வி.ஆரை கைது செய்வது குறித்தும், ஆட்சியாளர்கள் ஆலோசிக்க தொடங்கினர்.

ஆனால், அவ்வாறு செய்தால் மக்கள் போராட்டம் மேலும் வலுப்பெறும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்ததால், அந்த முடிவை கைவிட்டனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின், 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது.

இதுகுறித்து, கருத்து தெரிவித்த டி.வி.ஆர்., தமிழகத்தின் போராட்டம் வெற்றி அடைய, ‘தினமலர்’ பெரும் காரணமாக இருந்ததாக தெரிவித்தார். இதை தற்பெருமைக்காக கூறவில்லை என்றும், கன்னியாகுமரியில் யாரை கேட்டாலும், இதைதான் சொல்வர் என்றும் குறிப்பிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தையும், அங்கு வாழும் தமிழர்களையும், தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததே, ‘தினமலர்’தான் என்று கல்லிக்கோட்டை பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் நுார்முகமதுவும் தெரிவிக்கிறார்.

கன்னியாகுமரி போராட்டம் வெற்றி பெற்றவுடன், தினமலர் அலுவலகத்தை, திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகத்துக்கு மாற்ற, டி.வி.ஆர்., முடிவெடுத்தார். கன்னியாகுமரிக்கு அருகிலேயே அலுவலகம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால், திருநெல்வேலி தேர்வு செய்யப்பட்டது.

‘தினமலர்’ வெளியாக தொடங்கியது. அங்கு வெளியான முதல் தலையங்கத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. ‘உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான், தினமலர் நாளிதழின் தனி அம்சம். ஐரோப்பாவில் ஓடும் ரைன் நதியை விடவும், காவேரி நதிக்குதான் முதலிடம் கொடுக்கப்படும். தேம்ஸ் நதியை விட தாமிரபரணிதான் தினமலருக்கு முக்கியம். சொந்த நாட்டை, எலிக்கும் நட்டுவாக்காலிக்கும் விட்டுக் கொடுத்துவிட்டு, அடுத்த வீட்டின் மேன்மையை பற்றி பேசி திரிவது மோசமான பழக்கம்’ என எழுதப்பட்டது.

இந்த பழக்கம், எப்படியோ தமிழர்கள் மத்தியில் வந்துவிட்டது, சொந்த வீட்டை முதலில் கவனித்து விட்டு, பின்னர் அடுத்த வீட்டை கவனிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இதை ஒரு கொள்கையாகவே, ‘தினமலர்’ நாளிதழ் கடைபிடித்தது. தமிழர்களின் நலனும், தமிழகத்தின் வளர்ச்சியும் தான், தினமலரின் பிரதான நோக்கமாக அமைந்தது.

டெலிபிரின்டர்

நெல்லையில் இருந்தபடி நாளிதழ் நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தன. சென்னைக்கு விரைவில் செய்திகள் கிடைப்பதுபோல, நெல்லைக்கு செய்திகள் கிடைக்காது. பி.டி.ஐ., நிறுவனம் கூட, ரயில் வழியேதான், செய்திகளை அனுப்பி வைக்கும். அது மறுநாள்தான், நெல்லையை வந்து அடையும். இத்தனைக்கும் அந்த சமயத்தில், நெல்லையில் எங்குமே, ‘டெலிபிரின்டர்’ வசதியே கிடையாது.

பின்னாளில்தான், தினமலர் தான் நெல்லைக்கு, ‘டெலிபிரின்டரை’ கொண்டு வந்தது. அனைத்து இடர்களையும் கடந்து, நெல்லையில் இருந்தபடி, பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி காட்டினார் டி.வி.ஆர்.,

கடந்த 1967ம் ஆண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அண்ணாதுரை தலைமையிலான, தி.மு.க., ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. அன்று முதல் அரசு சார்பில், தினமலருக்கு வழங்கப்பட்ட விளம்பரங்கள் திடீரென நிறுத்தப்பட்டன. மேலும், பள்ளிகள், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில், ‘தினமலர்’ நாளிதழ் வாங்க தடை விதிக்கப்பட்டது.

பத்திரிகைகள் என்பவை எதிர்க்கட்சிகள் போல செயல்பட வேண்டும், அரசின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று கூறப்படுவது உண்டு. அதைத் தான், ‘தினமலர்’ நாளிதழும் செய்தது. ஆனால், அதை விரும்பாத தி.மு.க., அரசு, தினமலருக்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்தது. 1976ம் ஆண்டு வரை, இதே நிலைதான் நீடித்தது.

பின், 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., முதல்வராக பதவியேற்ற பின்தான் நிலைமை சீரானது. பத்திரிகை துறையில் பல்வேறு புதுமைகளை டி.வி.ஆர். கொண்டு வந்தார். தமிழ் நாளிதழ் துறையில், ‘ஆப்செட்’ அச்சு முறையை, முதல் முதலில் அவர் தான் அறிமுகம் செய்தார்.

நவீன ஆப்செட் என்பது, ‘டிஜிட்டல் பைல்’களை பயன்படுத்தி, துல்லியமாகவும், வேகமாகவும், படங்களை அச்சிடும் ஒரு அச்சு தொழில்நுட்பமாகும்; அதன் வழியே, பத்திரிகைகளில் தெளிவான மற்றும் தத்துரூபமான படங்களை வெளியிட்டார்.

தினமலர் வருகைக்கு முன்பு, பெரும்பாலான தமிழ் பத்திரிகைகள், கருப்பு வெள்ளயைில்தான் இருந்து வந்துள்ளன. அந்த முறையை மாற்றி, வண்ணமயமான பத்திரிகைகளை டி.வி.ஆர்., வெளியிட தொடங்கினார்.

தமிழக அரசு 1978ம் ஆண்டு, எழுத்து சீர்திருத்தத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. அதற்கு முன்னதாகவே, தமிழ் பத்திரிகை துறையில் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறையில் கடைபிடித்து வந்த ஒரு சில பத்திரிகைகளில் தினமலர் நாளிதழும் ஒன்று.

பத்திரிகை துறையை தாண்டியும், பல்வேறு சாதனைகளை, டி.வி.ராமசுப்பையர் படைத்துள்ளார்.

* நெல்லை – கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில் திட்டத்தை செயல் வடிவம் பெற வைத்தது, அவற்றில் மிக முக்கிய சாதனையாகும். நெல்லை – கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்தது.

அதற்காக, பல்வேறு தலைவர்களும் குரல் கொடுத்து வைத்தனர். அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், டி.வி.ஆர்., விடுவதாக இல்லை. தொடர்ச்சியாக, டில்லிக்கு பயணித்த அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசினார். கோரிக்கைள் தொடர்பாக, தினமலரில் தொடர்ந்து செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டார்.

இதன் விளைவாக, நெல்லை – கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில் சேவைக்கான கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டி.வி.ராமசுப்பையரே நியமிக்கப்பட்டார். அதன் செயலராக தியாகி சிவதாணு செயல்பட்டார். ஓராண்டு, இரண்டு ஆண்டு அல்ல, 20 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த ரயில் திட்டத்திற்காக டி.வி.ஆர்., போராடினார்.

அதாவது, 1979ம் ஆண்டுதான், அந்த திட்டம் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நெல்லை – கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில் திட்ட வெற்றியில், வேறு யாரும் பங்கு போட முடியாது. இந்த திட்டம் முழுக்க முழுக்க, டி.வி.ஆரையே சாரும் என, பலரும் பாராட்டினர்.

* அதேபோல, திண்டுக்கல், துாத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் போன்ற புதிய மாவட்டங்கள் உருவெடுக்கவும், டி.வி.ஆர்., முக்கிய பங்காற்றினார். ஒரு மாவட்டத்தின் தலைநகரில் இருந்து, அதன் எல்லை கிராமங்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதையும், அதனால் சாமானிய மக்கள் அடையும் சிரமங்களையும், புள்ளிவிவரங்களுடன் அவர் கட்டுரைகளாக வெளியிட்டார்.

மேலும், வாசகர் கடிதங்கள் மற்றும் தலையங்கம் வாயிலாக, பொது மக்களின் ஆதரவையும் திரட்டினார். இதன் விளைவாகவும், பிற காரணங்களாகவும், புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

மதுரையில் இருந்து திண்டுக்கல்லும், ராமநாதபுரத்தில் இருந்து விருதுநகரும், திருநெல்வேலியில் இருந்து துாத்துக்குடியும் பிரிக்கப்பட்டன. 1957ம் ஆண்டே, தினமலர் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்திருந்தாலும், 1979ம் ஆண்டுதான், அதன் சென்னை பதிப்பு தொடங்கியது.

அந்த ஆண்டு, ஏப்ரல் 29ம் தேதி, சென்னை பதிப்பை தொடங்கி இன்று வரை, தினமலர் நாளிதழின் தலைமையகமாக சென்னை அலுவலகம்தான் இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மதுரையிலும், பின்னர் ஈரோட்டிலும், தினமலர் பதிப்பு வெளியானது. ஈரோடு பதிப்பை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., 1984ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய அவர், ‘நெல்லையில் இருந்து தினமலர் வெளியாகி வந்தபோது, சென்னையிலும் அதன் பதிப்பு வெளியாக வேண்டும் என்று நான் விரும்பினேன். நண்பர் ஒருவரிடம் சொல்லி அதற்கான பணிகளை துாண்டி விட்டேன். யார் யாரோ, எதை எதையோ துாண்டி விடுகின்றனர்; நான் நல்லதை துாண்டி விட்டேன்’ என்று எம்.ஜி.ஆர்., தெரிவித்தார்.

அந்த விழாவில், உடல் நல குறைவு காரணமாக, டி.வி.ராமசுப்பையர் பங்கேற்வில்லை. இதுகுறித்து பேசிய எம்.ஜி.ஆர்., ‘டி.வி.ஆர்., விரைவில் குணமடைந்து, மற்றொரு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்; அதில் நானும் பங்கேற்று, அவருக்கு மாலை அணிவித்து, மகிழ வேண்டும். பதிலுக்கு, அவர் என்னை வாழ்த்த வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்தார்.

அந்த விருப்பம், கடைசி வரை நிறைவேறவில்லை. அதே ஆண்டு, அதாவது, 1984ம் ஆண்டு, ஜூலை 21ம் தேதி, டி.வி.ராமசுப்பையர் காலமானார். அவருக்கு பின், அவரது வாரிசுகள் ‘தினமலர்’ நாளிதழை வழிநடத்திச் செல்ல தொடங்கினர். டி.வி.ஆரின் நினைவாகவும், இதழியல் துறையில், அவர் ஆற்றிய சேவையை பாராட்டியும், மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது.

ஆளுமை

பத்திரிகையை வெறுமனே செய்திகளை வெளியிடும் ஊடகமாக மட்டும் பார்க்காமல், சமூக மாற்றத்துக்கான ஆயுதமாக பயன்படுத்தியவர் டி.வி.ஆர்., ஒரு தனி மனிதனாக தினமலர் நாளிதழை தொடங்கி, லட்சக்கணக்கான மக்களின் காலை பொழுதை செய்திகளால் நிரப்பிய பெருமை, டி.வி.ஆருக்கு உண்டு.எனவே, தமிழக பத்திரிகை துறையில் என்றுமே அழிக்கவும், தவிர்க்கவும் முடியாத ஒரு பெயர், ஒரு ஆளுமை டி.வி.ராமசுப்பையர்.

Source link