பெங்களூரு: இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு, உடற்தகுதியை பொறுத்து பும்ரா தேர்வு செய்யப்படுவார்.
அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் ஆக. 15ல் காலேயில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், ஆக. 23-27ல் கொழும்புவில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராக இந்திய அணி, இலங்கை கிளப் அணியுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.
இத்தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இடது முழங்காலில் காயமடைந்த இவர், லார்ட்சில் நடந்த கடைசி போட்டியில் விளையாடவில்லை. எனவே இவர், உடற்தகுதியை பொறுத்து இலங்கை தொடருக்கு தேர்வாகலாம்.
இந்த அணியில் சுழற்பந்துவீச்சு ‘ஆல்-ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா இடம் பெறலாம். கடைசியாக இவர், கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெறலாம். மூன்றாவது ‘சுழல்’ வீரராக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
