பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்; வெள்ளிக்கிழமை முதல் புதிய நேர அட்டவணை

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி இடையே மஞ்சள் வழித்தடம் எனப்படும் வழித்தடம் 4-ல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில், வழித்தடம் 4-ன் கீழ் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான 15 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள 11 உயர்மட்ட ரயில் நிலையங்களில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி முதல் பயணிகள் சேவை தொடங்கப்பட்டது.

இந்த சேவை தொடங்கப்பட்ட பிறகு, பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், வழித்தடம் 4-ல் ரயில் சேவை தொடங்கும் நேரம் காலை 6 மணியாக மாற்றப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும். இந்த நேர மாற்றம் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதுடன், அதிகாலை நேரத்தில் வடபழனி மற்றும் பூந்தமல்லி நோக்கிச் செல்வோரின் பயணத்தையும் எளிதாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்டோபர் 23-ம் தேதி முதல், 15 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடத்தில் இரு திசைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் வடபழனி ஆகிய இரு முனையங்களிலிருந்தும் கடைசி ரயில் இரவு 9 மணிக்குப் புறப்படும். திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நெரிசல் மிகுந்த காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். எனவே, மாற்றியமைக்கப்பட்ட ரயில் சேவை நேரத்தைக் கருத்தில் கொண்டு பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழித்தடத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது காலை நேரத்தில் முன்னதாகவே அதாவது காலை 6 மணிக்கே சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link