மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ‘பூம்புகாரில்’ பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை 2025 மற்றும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு கட்ட அகழ்வாய்வை நடத்தியது.
அதில் கடலில் மூழ்கிய பண்டைய பூம்புகாரின் கட்டிடம் சுற்றுச்சுவர் சாலை உள்ளிட்ட கட்டமைப்புகள், பானை ஓடுகள், செங்கல் வானகிரி பகுதியில் கோவில் கண்டறியப்பட்டதுடன், 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று மூன்றாம் கட்டமாக பூம்புகார் கடற்கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 10 மீட்டர் ஆழத்தில் ஆழ்கடல் பகுதியில் தொல்லியல் துறையினர் அகழ்வாய்வை தொடங்கியுள்ளனர் தொடர்ந்து இந்த ஆய்வு 20 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சார் ஆராய்ச்சி ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தொல்லியல் துறை இணை இயக்குனர் யதீஷ்குமார், இணை இயக்குனர் ஓய்வு சிவானந்தம், தொல்லியல் துறை அலுவலர் வசந்தகுமார் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை ஒரு விசைப்படகு, 2 பைபர் படகுகளில் அதிநவீன டைவிங் உபகரணங்கள், அண்டர் வாட்டர் கேமரா ஆகியவற்றுடன் டைம் போர்ஸ் அமைப்பின் இயக்குனர் அரவிந்தன் வழிகாட்டுதலில் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின்போது தமிழக தொல்லியல், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தொல்லியல் துறை இயக்குனர் ஜெயசீலன் ஆகியோரும் ஆய்வு நடைபெறும் இடத்தில் ஸ்கூபா டைவ் முறையில் ஆழ்கடலில் இறங்கி அகழ்வாய்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆழ்கடலுக்குள் ஆய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை மற்றும் ஸ்கூபா டைவ் வீரர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கடலில் மூழ்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதற்காக, சென்னையில் அமைச்சர் இரண்டு நாட்கள் பயிற்சி மேற்கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பிய அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களிடம் கூறியதாவது: பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் பண்டைய பூம்புகார் நகரம் கடலின் உள்பகுதியில் உள்ளது. இதனை அறிந்து கொள்ளும் விதமாக தமிழக தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நவீன தொன்மை வாய்ந்த பூம்புகாரை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற தமிழக முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார். தற்போது நான் சென்று ஆய்வு செய்தபோது பழமை வாய்ந்த கட்டடங்கள், பானைஓடுகள், தெருக்கள் வடிவமைப்பு உள்ளிட்டவைகள் காணப்படுகின்றன. இது சங்க கால நகரமாக இருக்கலாம் என தெரிய வருகிறது.
மேலும் உறைகிணறுகள், நீண்ட கல் எச்சங்கள் காணப்படுகின்றன. தொல்லியல் ஆராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெறும். இதில் நான் நேரில் பங்கேற்று பண்டைய பூம்புகாரின் பெருமைகளை கடலின் உள்பகுதியில் சென்று பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகளை வழங்கி உள்ளன. அதனை உரிய ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறேன்.
பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் கனிவோடு பரிசீலனை செய்யப்படும். அதன் முதற்கட்டமாக ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டத்திற்கு அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்களை சேர்க்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு விதித்துள்ள கட்டண தொகை காண அறிவிப்பு பலகைகளை கண்டிப்பாக வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
