பெங்களூரு பயணத்தை 3 மணி நேரமாகக் குறைக்கும் விரைவுச்சாலை திட்டம்: ஓராண்டு தாமதம் ஏன்? எப்போது திறக்கப்படும்?

சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடையிலான பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாகக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டு வரும் சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை திட்டம் நிறைவடைய மேலும் ஓராண்டு தாமதமாகும் என டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. ஏலும், காஞ்சிபுரம் – அரக்கோணம் இடையிலான 25 கி.மீ சாலைப் பணிகளை முடிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய டெண்டர்களைக் கோரியுள்ளதால், இத்திட்டம் 2028-ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் என டெக்கான் ஹெரால்டு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வேலூர் மற்றும் ஓசூர் வழியாகச் சென்னை – பெங்களூரு இடையே பயணிக்க 7 முதல் 8 மணி நேரம் வரை ஆகிறது. இதைக் குறைக்கும் வகையில், காஞ்சிபுரம், அரக்கோணம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக 258 கி.மீ தொலைவுக்குப் புதிய விரைவுச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தில் கர்நாடகா பகுதிக்கு உட்பட்ட 71 கி.மீ சாலைப் பணிகள் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. ஆந்திராவில் உள்ள வழித்தடங்களில் 93% முதல் 100% வரையிலான பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேபோலத் தமிழகத்தில் குடிபாலா – வலாஜாபேட்டை (99%), வலாஜாபேட்டை – அரக்கோணம் (98%), ஸ்ரீபெரும்புதூர் – காஞ்சிபுரம் (89.97%) ஆகிய பகுதிகளில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன.

இருப்பினும், காஞ்சிபுரம் – அரக்கோணம் இடையிலான 25 கி.மீ தொலைவிலான வழித்தடத்தில் இதுவரை 53% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. நிதிப் பற்றாக்குறை காரணமாக ஒப்பந்ததாரர் கடந்த மே 2025-ல் பணிகளை நிறுத்தியதால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதற்கெதிராக ஒப்பந்ததாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த மாதம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சாதகமாக முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள பணிகளை முடிப்பதற்காக ரூ.633.12 கோடி மதிப்பீட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  புதிய டெண்டர் வெளியிட்டுள்ளது. இம்மாத இறுதியில் புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்பட்டாலும், எஞ்சிய பணிகளை முடிக்கக் குறைந்தபட்சம் 18 மாதங்கள் வரை ஆகும். இதனால், 2026 இறுதிக்குள் முடிப்பதாக இருந்த இத்திட்டத்தின் முழுமையான திறப்பு 2028-க்குத் தள்ளிப்போயுள்ளது. நில கையகப்படுத்துதல், மூலப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம் மற்றும் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை அகற்றுவதில் ஏற்பட்ட தாமதங்களே தமிழகப் பகுதியில் இத்திட்டம் பின் தங்குவதற்குக் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.



Source link