பெங்களூரு வழியாக திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பாசிட்டிவ் சிக்னல் கொடுத்த ரயில்வே அமைச்சகம்

திருப்பதி: திருப்பதி மற்றும் கர்நாடக மாநிலம் சிவமோகா இடையே பெங்களூரு வழியாகப் புதிய வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்குவது தொடர்பான திருப்பதி தொகுதி எம்.பி. மட்டிலா குருமூர்த்தியின் முன்மொழிவுக்கு ரயில்வே அமைச்சகம் சாதகமான பதிலை அளித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, திருப்பதி ரயில் நிலையத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் எம்.பி. மட்டிலா குருமூர்த்தி, ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே வாரியம், இதனை முன்னெடுத்துச் செல்வதாக அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பதியில் இருந்து பெங்களூரு வழியாக கர்நாடகாவின் சிவமோகா நகருக்குப் புதிய வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவு உருவாக்கப்பட்டுள்ளதாக எம்.பி. குருமூர்த்திக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ரயில் சேவை குறித்துப் பேசிய எம்.பி. குருமூர்த்தி, “ஆன்மிக யாத்திரை, கல்வி, உயர்தர மருத்துவ சிகிச்சை மற்றும் பிற முக்கியத் தேவைகளுக்காக பெங்களூரு மற்றும் திருப்பதி இடையே தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்த வந்தே பாரத் ரயில் ஒரு மிக முக்கியமான பங்களிப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link