எழுதியவர்: சஜு பிலிப்
பொதுவெளியில் பெண்கள் குறித்த அவரது கருத்துக்கள் கேரளாவில் பெரும் புயலை கிளப்பிய ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரபல முஸ்லிம் மதகுரு ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் (பிரபலமாக ‘காந்தபுரம்’ என்று அழைக்கப்படுபவர்), வெள்ளிக்கிழமை இந்த சர்ச்சைக்காக வருத்தம் தெரிவித்தார். மேலும், “விவாதங்கள் நடுநிலையான முறையில் யோசனைகளை மதிப்பிடுவதற்கும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்குமான ஆரோக்கியமான மன்றங்களாக இருக்க வேண்டும்” என்று கூறி, தனது ஆதரவாளர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க
ஆகஸ்ட் 26 அன்று ஈத் மீலாதுன் நபி கொண்டாட்டத்தின் அடுத்த நாள் முஸ்லியார் தனது அமைப்பான சமஸ்தா கேரளா ஜமிய்யத்துல் உலமா (சன்னி மதகுருமார்கள் மற்றும் அறிஞர்களின் சக்திவாய்ந்த அமைப்பு) கீழ் உள்ள அனைத்து மசூதி கமிட்டிகளுக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டார், “இஸ்லாமிய கொண்டாட்டங்கள் மதத்தின் எல்லைகளைத் தாண்டக்கூடாது. அனைத்து மசூதி கமிட்டிகள், மதராஸாக்கள் மற்றும் பிற நிறுவனங்கள் இத்தகைய கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இஸ்லாமிய விதிமுறைகளின்படி நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சம்பந்தமில்லாத ஆண்களுக்கு மத்தியில் (அதாவது, அவர்களின் உறவினர்கள் அல்லாத ஆண்கள்) பொது இடங்களிலும் மேடைகளிலும் பெண்களை காட்சிப்படுத்துவதும், இஸ்லாமியத்திற்கு புறம்பான கொண்டாட்டங்கள் மற்றும் நடைமுறைகளை கலப்பதும் இறை நம்பிக்கையாளர்களுக்கு பொருத்தமானதல்ல மற்றும் விரும்பத்தகாதது” என்று குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் ஒரு பொது நிகழ்ச்சியிலும் முஸ்லியார் இதனையே மீண்டும் கூறினார், “குர்ஆன் கற்பிப்பது என்னவென்றால், பெண்கள் தங்கள் வீடுகளுக்குள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதாகும். பெண்கள் இந்த முறையில் பொதுவெளியில் நுழைந்தால், பெரிய அழிவு ஏற்படும். இதனால் தான் பர்தா முறை அறிமுகப்படுத்தப்பட்டது” என்றும் அவர் கூறினார்.
கேரளாவில் நடந்த ஈத் கொண்டாட்டங்களின் போது பல முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பேரணிகளில் நடனமாடுவதை காண முடிந்தது. அதற்கு முன், ஓணம் பண்டிகையின் போது, கேரளாவின் மாநிலப் பண்டிகையான இதில் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மற்றவர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோக்கள் வைரலாகின. ஓணம் பண்டிகைகளில் முஸ்லிம்கள் பங்கேற்க கூடாது என்று சில மதகுருமார்கள் உத்தரவிட்டிருந்த போதிலும் இது நடந்தது.
முஸ்லியாரின் கருத்துக்களுக்கு கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடும் கண்டனம் தெரிவித்தார். இருப்பினும் காங்கிரஸின் கூட்டணியான ஐ.யு.எம்.எல் (IUML) இந்த மதகுருவை பாதுகாக்க முயன்றது. பின்னர், சி.பி.ஐ(எம்) கட்சியும் முஸ்லியாருக்கு எதிராக குரல் கொடுத்தது, இருப்பினும் அவரும் அவரது சமஸ்தா பிரிவும் மாநிலத்தில் அக்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கருதப்படுகிறது.
கடும் கண்டனம்
முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினர் பி.கே.சைனபா கூறுகையில், சிறுமிகள் மற்றும் பெண்கள் விஷயத்தில் சமுதாயம் மாறிவிட்டது என்றார். “அவர்கள் தங்கள் நம்பிக்கையை பெரிதாக கருதினாலும், எண்ணங்களில் தாராளமாக இருக்கிறார்கள், சமூக வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். 1980-களில் நான் சி.பி.ஐ(எம்)-ல் சேர்ந்தபோது, சமுதாயத்தில் இருந்து எதிர்ப்புகளைச் சந்தித்தேன். இப்போது யாரும் அப்படி எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக ஐ.யு.எம்.எல், தேர்தல்களில் பெண்களை போட்டியிட வைக்க விரும்புகின்றன” என்று அவர் கூறினார்.
நபிகள் நாயகத்தின் மனைவியைப் பற்றிக் குறிப்பிட்ட சைனபா, “ஆயிஷா படைகளை வழிநடத்த முடியும் என்றால், இன்றைய ஆயிஷாக்கள் அரசியலமைப்பு வழங்கியுள்ள சுதந்திரத்தையும் உரிமைகளையும் அனுபவிக்க ஏன் அனுமதிக்கப்படக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.
ஐ.யு.எம்.எல்-லின் மூத்த பெண் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் நூர்பீனா ரஷீத் கூறுகையில், பெண் அதிகாரமளித்தலின் மாறுபட்ட கருத்துக்கள் குறித்து தனது கட்சி அமைதியாகவோ அல்லது தெளிவற்றதாகவோ இருக்கக்கூடாது என்றார். “இஸ்லாமிய கட்டுப்பாடுகளில் உறுதியாக இருந்து கொண்டே பெண்கள் எவ்வாறு பொது மற்றும் அரசியல் வாழ்க்கையில் பங்கேற்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
1990-களில், முஸ்லிம் பெண்களை பொதுவெளிக்கு கொண்டுவர நாங்கள் கடுமையாக உழைத்தோம். அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்தால் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைத் தாண்டி, அவர்களை அரசியலின் முதன்மை நீரோட்டத்திற்கு கொண்டு வருவதே எங்களின் நோக்கமாக இருந்தது. இஸ்லாமிய கட்டுப்பாடுகளை உறுதியாக பின்பற்றி தங்கள் பொது வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்தை வடிவமைக்க அவர்களுக்கு கூறப்பட்டது” என்று கூறிய ரஷீத், இப்போது எழும் இந்தக் கேள்விகள் “என்னை அசௌகரியப்படுத்துகின்றன” என்றார்.
உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களை போட்டியிட வைத்து வரும் ஐ.யு.எம்.எல், இந்த ஆண்டின் சட்டமன்றத் தேர்தலின் போது ஒரு முஸ்லிம் பெண்ணை வேட்பாளராக நியமித்தது. கோழிக்கோட்டில் உள்ள சி.பி.ஐ(எம்)-ன் கோட்டையான பேரம்பப்ராவில், எல்.டி.எஃப்-ன் மாநில ஒருங்கிணைப்பாளரான டி.பி. ராமகிருஷ்ணனுக்கு எதிராக வெற்றி பெற்று, பாத்திமா தஹ்லியா கட்சியின் முதல் முஸ்லிம் பெண் சட்டமன்ற உறுப்பினரானார்.
வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் முஸ்லியார், “ஆன்மீக விவாதங்களை சர்ச்சைகளாக மாற்ற முயல்பவர்களின் சுயநல நோக்கங்களை நாம் உணர வேண்டும். அறிவை தேடுவதை தலைகீழாக மாற்ற விரும்பும் இத்தகைய தீய நோக்கங்களை விழிப்புணர்வுடன் அணுக வேண்டும். தொண்டர்கள் எந்தவிதமான தூண்டுதலுக்கும் பலியாகக்கூடாது. தீமையை நன்மையால் எதிர்கொள்வதே சன்னி நம்பிக்கையாளர்களின் பாரம்பரியமாக எப்போதும் இருந்து வருகிறது” என்று கூறினார்.
யார் இந்த ‘காந்தபுரம்’?
94 வயதான ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் 2019-ஆம் ஆண்டில் சமஸ்தா கேரளா ஜமிய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளரான அவருக்கு சன்னி மதகுருமார்களின் தேசிய அமைப்பால் ‘கிராண்ட் முஃப்தி’ பட்டம் வழங்கப்பட்டது. அதே நேரத்தில், முஸ்லியார் தனது பழமைவாத கருத்துக்களுக்கு, குறிப்பாகப் பாலினப் பிரச்சினைகளில் பெயர் பெற்றவர்.
2009-ஆம் ஆண்டில், மாநிலச் சட்ட ஆணையம் பலதார மணத்தை தடை செய்ய பரிந்துரைத்தபோது, மனைவியரின் மாதவிடாய் காலத்தில் ஆண்கள் உடலுறவைத் தவறவிடக் கூடாது என்பது அவரது எதிர்வினைகளில் ஒன்றாக இருந்தது. மேலும், அவர் இருபாலர் கல்விக்கும், பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும் எதிராக நிலைப்பாடு எடுத்துள்ளார். அத்துடன், முஸ்லிம் பெண்களுக்கான திருமணத்தின் குறைந்தபட்ச வயது 16 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முஸ்லியாரின் சன்னிப் பிரிவின் தலைமையிலான சமஸ்தா கேரளா சன்னி வித்யாப்யாச வாரியம், மாநிலத்தில் நூற்றுக்கணக்கான மதராஸாக்களை நிர்வகிக்கிறது, அவற்றில் சில பெண்களுக்கு மட்டுமேயானவை. நம்பிக்கை விஷயத்தில் பழமைவாதியாக இருந்தாலும், வணிக வாய்ப்புகளை ஆராய்வதில் முஸ்லியார் வெளிப்படையாகவே இருந்துள்ளார்.
கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஒருங்கிணைந்த நகரமான ‘மார்க்கஸ் நாலேஜ் சிட்டி’ அவரது முதன்மைச் திட்டங்களில் ஒன்றாகும். இதில் மசூதி, யுனானி மருத்துவக் கல்லூரி, பிசினஸ் பள்ளி, குடியிருப்பு வளாகங்கள், செவிலியர் கல்லூரி, நான்கு நட்சத்திர ஹோட்டல் மற்றும் சந்தை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
நாலேஜ் சிட்டியின் தலைவராக முஸ்லியார் இருக்கும் வேளையில், அவரது மகன் முகமது அப்துல் ஹக்கீம் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்த நகரம் முக்கியமாக அந்த மதகுருவின் ஆதரவாளர்களான பெருந்திரளான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
அரசியல் களத்தில், முஸ்லியார் சி.பி.ஐ(எம்) கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளார்.
இந்த ஆண்டின் சட்டமன்றத் தேர்தலின் போது, குறிப்பாக வட கேரளாவில் சமுதாயத்திற்குள் ஊடுருவ, அவரது தலைமையின் கீழ் உள்ள சன்னி முஸ்லிம்களை அக்கட்சி பெரிதும் நம்பியிருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பிறகு, இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எந்த பெரிய சிரமங்களையும் எதிர்கொள்ளவில்லை என்று கூறியபோது முஸ்லியார் மற்றொரு சர்ச்சையில் சிக்கினார்.
2025-ஆம் ஆண்டில், ஏமன் குடிமகன் ஒருவரை கொன்ற வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனையை ஒத்திவைக்க தனது தலையீடு உதவியதாக முஸ்லியார் கூறினார். ஏமன் சூஃபி அறிஞர்களுடனான தனது நல்லுறவை அவர் பயன்படுத்தியதாக கூறினார். அவரது இந்த கூற்றை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
