பெண்ணுக்குப் பரிசோதனை; வயிற்றில் இருந்த பொருட்களால் மருத்துவர்கள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட் நகரைச் சேர்ந்த 33 வயதான  இளம்பெண், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு நவீன மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.  

அந்த பரிசோதனையில், அப்பெண்ணின் வயிற்றில் பேனாக்கள், ஸ்பூன்கள் மற்றும் மெழுகுவர்த்தி உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, வயிற்றில் சிறிய துளையிட்டு ’லேபராஸ்கோபி’ அறுவை சிகிச்சையின் மூலம் வயிற்றில் இருந்த பொருட்களை மருத்துவர்கள் அகற்றினர். இதில், வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மர ஸ்பூன்கள் மற்றும் 1 மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.  

உணவு அல்லாத பொருள்களை உண்ணத் தூண்டும் ‘பைகா சிண்ட்ரோம்’ அல்லது மனநலப் பாதிப்பு காரணமாக அப்பெண் இந்த பொருட்களை விழுங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். தற்போது அந்தப் பெண் உடல் நலம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link