போத்தனுார்: கோவையில், 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி, பெண் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றபோது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
கோவை வெள்ளலுாரை சேர்ந்த, 14 வயது சிறுமி, துணிக்கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து, வீட்டுக்கு செல்ல பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார்.
சிறுமிக்கு அறிமுகமான, கணேசபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சந்தோஷ், 25, தன் நண்பருடன் அங்கு வந்து, சிறுமியை பைக்கில், கஞ்சிக்கோனாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றார். இதை எதிர்பார்க்காத சிறுமி வீட்டிற்குள் வர மறுத்துள்ளார். சந்தோஷுடன் வந்த தவசி, 20, சிறுமியிடம் அரிவாளை காட்டி மிரட்டி, வீட்டினுள் அழைத்து சென்று, இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின், சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனர். சிறுமியின் பெற்றோர் புகாரில், கோவை தெற்கு போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
சிறுமியை அச்சுறுத்த பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்திருந்த இடத்துக்கு, தவசியை, போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, அரிவாளை எடுத்த தவசி, இன்ஸ்பெக்டர் சுவர்ணவள்ளியை வெட்டி, தப்ப முயன்றாார். உடனிருந்த எஸ்.ஐ., சிலம்பரசன், தவசியின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டு, பிடித்தார். இன்ஸ்பெக்டர் சுவர்ணவள்ளி, குற்றவாளி தவசி ஆகியோர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:
சந்தோஷ், தவசி இருவரும் நண்பர்கள். தவசி, சம்பவம் நடந்த பகுதிக்கு, 10 நாட்களுக்கு முன்புதான் வாடகைக்கு குடியேறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சந்தோஷ் ஏற்கனவே அறிமுகமானவர்.
சம்பவத்தன்று இரவு, 8 மணியளவில் பஸ் ஸ்டாண்டில் சிறுமி தன் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சந்தோஷ், தவசி இருவரும் அந்த வாலிபரை விரட்டிவிட்டு, சிறுமியை அழைத்துச் சென்று, ஒரு வீட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த வழக்கில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
