பென்குயின் நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு: சோனியா காந்தி சுயசரிதையை வெளியிடும் ஹார்ப்பர் காலின்ஸ்

எழுதியவர்: ரிது சரின்

சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில் சில “எடிட்டோரியல் மாற்றங்கள் மற்றும் நீக்கங்களை” செய்ய மறுத்ததால், பென்குயின் நிறுவனம் அதன் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் முதன்முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆங்கிலத்தில் படிக்க:

இது முக்கியத்துவம் பெறுவது ஏன்?

நாட்டின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவரின் இந்த பரபரப்பான சுயசரிதை நூல், பிரதமர் குறித்த சில பகுதிகள் அடங்கிய தகவல்களைத் திருத்துவது தொடர்பாகப் பதிப்பகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டால் சர்ச்சையைச் சந்தித்தது.

இந்த சுயசரிதை நூல் வரும் 2026 நவம்பர் 10-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. “நமது காலத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அரசியல் சுயசரிதைகளில் ஒன்றான ‘பிலாங்கிங்’, காதல், அடையாளம், கடமை மற்றும் பிணைப்பு ஆகியவற்றை விவரிக்கும் ஆழமான தனிப்பட்ட கதையாகும். மேலும் இது இந்தியாவின் பயணத்தைப் பற்றிய அரிதான ஒரு உள்நோக்கை வழங்குகிறது” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பதிப்பாளர் பரிந்துரைத்த சில திருத்தங்கள் மற்றும் நீக்கங்களைச் சோனியா காந்தி நிராகரித்ததை அடுத்து, இந்த நூலை வெளியிடுவதில்லை என பென்குயின் நிறுவனம் முடிவெடுத்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், இந்திய விநியோகப் உரிமையைப் பெற ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. புத்தக முகவரான டேவிட் கோட்வினுடன் (David Godwin) பல இந்தியப் பதிப்பகங்கள் தொடர்பில் இருந்தபோதிலும், இரண்டு வாரங்களுக்கு முன்பே ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. 

முன்னதாக, பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் அமெரிக்கப் பிரிவான ஆல்ஃப்ரெட் ஏ நாஃப் (Alfred A Knopf), இந்த நூலை நவம்பர் 10-ம் தேதி வெளியிட உள்ளதாகவும், அதன் முதற்கட்டமாக 1 லட்சம் பிரதிகள் அச்சிடப்படும் என்றும் அறிவித்திருந்தது.

 

பென்குயின் நிறுவனத்திற்கும் சோனியா காந்திக்கும் இடையே குறைந்தது இரண்டு மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. தொடக்கத்தில் “சுமுகமாக” இருந்த இந்தப் பேச்சுவார்த்தை, இறுதிக்கட்டத்தில் சற்று “கடுமையாக” மாறியதாகத் தெரிகிறது. 

குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது 12 ஆண்டுகால ஆட்சி, ஆர்.எஸ்.எஸ்-ன் பங்களிப்பு, வகுப்புவாதப் பிரிவினைகள் மற்றும் கலவரங்கள், சிறுபான்மையினரின் நிலை குறித்த குறிப்பிட்ட பகுதிகள் பற்றிப் பதிப்பகத் தரப்பில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. 

இந்தப் பேச்சுவார்த்தையில் சோனியா காந்தி சார்பில் ராஜீவ் காந்தியின் உதவியாளரின் மனைவியும், குடும்ப நண்பருமான ஒருவர் பங்கேற்றார். பென்குயின் தரப்பில் ஆலோசகர்கள் உட்பட மூன்று எடிட்டர்கள் கொண்ட குழு செயல்பட்டது. 

ஆசிரியர் தரப்பில் இரண்டு முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, பென்குயின் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பது. இரண்டாவதாக, பிரதமர் நரேந்திர மோடி, கல்வான் பகுதியில் இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை, வகுப்புவாத மோதல்கள் மற்றும் சிறுபான்மையினரின் நிலை குறித்த பல திருத்தங்கள் மற்றும் நீக்கங்களைச் செய்வதன் மூலம், உலகளாவிய பதிப்பிற்கும் இந்தியப் பதிப்பிற்கும் இடையே பெரிய வேறுபாடு ஏற்பட்டு இரண்டு வெவ்வேறு பதிப்புகள் உருவாகும் சூழல் ஏற்படும் என்பதாகும். 

“இந்திய வாசகர்கள் சர்வதேச அளவில் வெளியான புத்தகத்தையும், இந்தியாவில் அச்சிடப்பட்ட புத்தகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, எதெல்லாம் மாற்றப்பட்டுள்ளது அல்லது தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டிய அவலநிலை ஏற்படும்” என்று இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்துள்ளார்.



Source link