பெரியாறு ஆய்வு அறிக்கை சாதகமாக வராவிட்டால் கோர்ட்டுக்கு செல்வோம் கேரள அதிகாரியின் அறிவிப்பு

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய பாதுகாப்பு மதிப்பீட்டு நிபுணர் குழுவின் 3 நாள் ஆய்வு நிறைவடைந்த நிலையில், ஆய்வு குறித்து கேரளாவுக்கு சாதகமான அறிக்கை வரவில்லையெனில் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என ஆய்வில் கலந்து கொண்ட கேரள தரப்பு அதிகாரியின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு குறித்து தேசிய நீர்மின் கழகத்தின் முன்னாள் தலைவர் பல்ராஜ் ஜோஷி தலைமையிலான மதிப்பீட்டு நிபுணர் குழு கடந்த 3 தினங்களாக ஆய்வு மேற்கொண்டது.

நிலநடுக்கவியல், கருவியியல், உலோகவியல், அணை வடிவமைப்பு, கட்டுமான பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். அணையில் தற்போதைய நிலை, கட்டுமான தன்மை, பாதுகாப்பு அம்சங்கள், மேற்கொள்ளப்பட்டுள்ள பலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மெயின் அணை, பேபி அணை, மண் அணை, ஷட்டர் பகுதிகள், நீர்க்கசிவு காலரி உள்ளிட்டவைகளை பார்வையிட்டது. இதனைத் தொடர்ந்து அணையின் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி பதிவு செய்யப்பட்டது. மூன்று நாட்கள் முழுமையாக நடந்த ஆய்வின் அறிக்கையை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இக்குழுவினருடன் கலந்து கொண்ட கேரள மாநிலதரப்பு அதிகாரியான மாநில நதிநீர் இணைப்பு ஆணையக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் நிருபர்களிடம் கூறும்போது, ‘அணையின் பலம், நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி உள்ளிட்டவைகள் குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்ள வலியுறுத்தினோம்.

மூன்று நாட்கள் மட்டும் நடந்த ஆய்வில் முழுமையான ஆய்வு அறிக்கையை எவ்வாறு தர முடியும். அதனால் கேரளாவுக்கு சாதகமான அறிக்கை வரவில்லையெனில் கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம், என்றார்.

இது தமிழக விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Source link