இது குறித்து ஜந்தர் மந்தரில் போராட்டக்களத்தில் உள்ள கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் நிர்வாகி சவுரவ் தாஸ் கூறுகையில், ” இனி எந்த ஒரு பேச்சு வார்த்தையும் ஜந்தர் மந்தரில், மக்கள் மன்றத்தில் தான் நடக்கும். ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா எங்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். நாங்கள் அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டோம். மக்கள் மன்றம் இங்கு தான் உள்ளது. எனவே, அமைச்சர்கள் இங்கே மக்கள் முன்பு தான் வரவேண்டும்.
அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு சிக்கல் இருப்பதாக உணர்ந்தால், ஜந்தர் மாந்தரின் அருகில் உள்ள ஒரு பொதுவான இடத்தில் சந்திக்கலாம் என்று தெரிவித்தோம். ஆனால், இது குறித்து அவர்கள் எந்த பதிலும் தரவில்லை. முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கான எண்ணம் அரசுக்கு இருக்க வேண்டும். பயனற்ற பேச்சு வார்த்தைக்கு எங்களுக்கு நேரமில்லை. நேரம் மிக முக்கியமானது. இங்கே ஆயிரக்கணக்கான மக்கள் முகாமிட்டுள்ளனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போராட்டத்தினை முடிவிற்குக் கொண்டுவர மூன்று முக்கிய நிபந்தனைகளை முன் வைத்துள்ளோம். முதலாவதாக தர்மேந்திர பிரதான் பதவி விலகி வேண்டும். இரண்டாவது, நீட் வினாத்தாள் கசிவு காரணமாக உயிர் இழந்த மாணவர்களுக்குத் தல ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மூன்றாவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது, இது சம்பந்தமாக எதிர்காலத்தில் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படாது என்ற உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. போராட்டக்களத்தில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடக் கூடாது. அது நமது நோக்கத்தைத் திசை திருப்பிவிடும். நாம் அமைதியான வழியில் போராட வேண்டும். மேலும், காவல்துறை போராட்டத்தில் கைது செய்தவர்கள் குறித்த விவரங்களை முழுமையான தகவலை வெளியிட வேண்டும். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
