அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சிகளில், சாலைப் பணிகளை மேற்கொள்ள அவருடைய உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு, டெண்டர் வழங்கியதில் 98.25 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நெருங்கும் விநாயகர் சதுர்த்தி: கட்டணங்களை 3 மடங்கு உயர்த்திய ஆம்னி பேருந்துகள்; பயணிகள் அதிர்ச்சி
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர, 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி பெற்ற நிலையில், இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க, 19 மாதங்கள் மத்திய அரசு எடுத்துக் கொண்டது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து, இந்த வழக்கில் மத்திய அரசு அதிகாரியை தாமாக முன் வந்து எதிர் மனுதாராக சேர்த்து, ஏன் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் ஏற்பட்டது என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் விசாரணையை செப்டம்பர் மாதம் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதாவது, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ள சூழலில், இதற்கு பின் இந்த வழக்கில் என்ன நடக்கும் என கடவுளுக்குத் தான் தெரியும் என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மேலும், வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
