பேட்டரி ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கிய இரட்டை சகோதரிகள்; போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்து அசத்தல்

புதுடில்லி: பேட்டரி ஸ்டார்ட்அப்பை உருவாக்கிய நிஷிதா மற்றும் நிகிதா ஆகிய இரட்டை சகோதரிகள் ‘போர்ப்ஸ் இந்தியா 30 அண்டர் 30’ பட்டியலில் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் நிஷிதா மற்றும் நிகிதா. இவர்கள் நெக்ஸஸ் பவர் என்ற தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கினர். பயிர் கழிவுகளை பயன்படுத்தி மின்சார வாகனங்களுக்கான, சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரிகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கினர்.

இவர்களின் புதுமையான முயற்சியைப் பாராட்டி போர்ப்ஸ் இந்தியா மற்றும் போர்ப்ஸ் ஆசியா 30 அண்டர் 30 தொழில் முனைவோர் பட்டியலில் இவர்கள் சேர்க்கப்பட்டனர். 20 வயதே ஆன இந்தச் சகோதரிகள் தங்களின் தனித்துவமான பேஷன் மற்றும் நடன வீடியோக்கள் மூலம் சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுப் பிரபலம் ஆகினர்.

முன்னணி உலகளாவிய ஆடம்பர பிராண்டுகளின் விளம்பரங்களில் பங்கேற்றதற்காக, 2026ம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 சர்வதேசப் பட்டியலில் மிக இளைய சாதனையாளர்களாக இடம்பெற்றுள்ளனர். இரட்டைச் சகோதரிகளான நிஷிதா மற்றும் நிகிதா, பள்ளி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலிருந்து ஒரு டீப்-டெக் ஸ்டார்ட்அப்பை உருவாக்கும் நிலைக்கு உயர்ந்தனர்.

இன்று, போர்ப்ஸ் ஆசியா 30 அண்டர் 30 விருது பெற்ற இவர்கள், நெக்ஸஸ் பவர் மூலம் பேட்டரி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இரட்டைச் சகோதரிகளில் ஒருவரான நிஷிதா கூறியதாவது: 13 அல்லது 14 வயதில் தொழில்முறை கலந்துரையாடல்களில் ஈடுபட்டது, எங்களுக்கு ஒரு வித்தியாசமான தன்னம்பிக்கையை அளித்தது;

நாங்கள் மின்சார வாகனங்களை உருவாக்கும் எண்ணத்துடன் தொடங்கினோம். ஆனால், அதில் பணியாற்றத் தொடங்கியபோது, ​​பேட்டரிதான் கடினமான பகுதி என்பதை உணர்ந்தோம். பிறகு அந்து பணியில் கவனம் செலுத்தினோம். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் வணிகவியலும், பின்னர் வணிக மேலாண்மையும் படித்திருந்தோம்.

ரசாயனங்களின் பெயர்களைப் புரிந்துகொள்வதுதான் ஒருவேளை மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது சண்டையிட்டதை விட, பணியின் போது தான் அதிக சண்டையிட்டு கொள்வோம். எதிர்காலத்தை நோக்கி இணைந்து செயல்படுவோம்,’ என்று நிஷிதா கூறினார்.

இந்த சகோதரிகளுக்குச் சிறுவயதிலிருந்தே இயந்திரங்கள், விமானங்கள் மற்றும் ஆட்டோமொபைல்களில் ஆர்வம் இருந்தது. 2017-18ல், அவர்கள் ஆரம்பத்தில் மின்சார வாகனங்களை உருவாக்க விரும்பினர். பிறகு பேட்டரியில்தான் மிகப்பெரிய சவால் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். அந்தச் சகோதரிகள் இணைந்து ஒரு நிறுவனத்தை நடத்துவதில் உள்ள சவாலையும் தொடர்ந்து எதிர்கொண்டனர்.

Source link