பேலன்ஸ் செக் முதல் யு.ஏ.என். ஆக்டிவேட் செய்வது வரை: இ.பி.எஃப்.ஓ-வின் 5 முக்கிய சேவைகள் இப்போது உமாங் செயலியில்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), யு.ஏ.என். தொடர்பான சில முக்கிய சேவைகளை உமாங் (UMANG) செயலிக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (Aadhaar-based face authentication) தங்களது யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) உருவாக்கலாம், ஆக்டிவேட் செய்யலாம் மற்றும் சரிபார்க்கலாம்.

இது முதல்முறையாக இ.பி.எஃப். அமைப்பில் சேரும் ஊழியர்களுக்கும், ஏற்கனவே UAN வைத்துள்ள ஆனால் அதை இன்னும் ஆக்டிவேட் செய்யாதவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் X  தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இப்போது உமாங் செயலி மூலம் உங்கள் யு.ஏ.என். எண்ணைப் பெறலாம், ஆக்டிவேட் செய்யலாம் மற்றும் சரிபார்க்கலாம். UAN கிடைத்தவுடன், இ.பி.எஃப்.ஓ-வின் ஆன்லைன் சேவைகளைப் பெறுவது மேலும் எளிதாகிறது. உங்கள் இ.பி.எஃப். பேலன்ஸைச் சரிபார்க்கலாம், பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்யலாம், க்ளெய்ம் (Claim) நிலையை அறியலாம் மற்றும் KYC தகவல்களை புதுப்பிக்கலாம். இன்றே உமாங் செயலியைப் பதிவிறக்கம் செய்து இ.பி.எஃப்.ஓ. டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது

உமாங் செயலியில் யுஏஎன் பெறவும் ஆக்டிவேட் செய்யவும் தேவையானவை

செல்லுபடியாகும் ஆதார் எண்

ஒடிபி சரிபார்ப்பிற்காக ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்

முக அங்கீகாரத்திற்காக ஆதார் ஃபேஸ் ஆர்.டி செயலி இன்ஸ்டால் செய்ய வேண்டும்

உமாங் செயலி மூலம் புதிய யுஏஎன் பெறுவது மற்றும் ஆக்டிவேட் செய்வது எப்படி?

யுஏஎன் எண் இல்லாதவர்கள் மற்றும் புதிதாக உருவாக்க விரும்புபவர்களுக்கான வழிமுறைகள்:

படி 1: உமாங் செயலியைத் திறந்து ‘UAN Allotment and Activation’  பகுதிக்குச் செல்லவும். ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு, ஆதார் சரிபார்ப்புக்கான ஒப்புதல் பெட்டியைச் சரிபார்க்கவும்.

படி 2: ‘Send OTP’ என்பதை அழுத்தவும். (கேட்கப்பட்டால் ஆதார் ஃபேஸ் ஆர்.டி செயலியை இன்ஸ்டால் செய்யவும்). கைபேசிக்கு வரும் ஒடிபி எண்ணை உள்ளிடவும்.

படி 3: ஆதார் ஏற்கனவே ஏதேனும் யுஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அமைப்பு பரிசோதிக்கும்:

  • இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் திரையில் தோன்றும்.
  • இணைக்கப்படவில்லை என்றால், முக அங்கீகாரப் பகுதிக்குச் செல்லும்.

படி 4: ஃபேஸ் ஆதெண்டிகேஷன் பக்கத்தில் ஒப்புதல் பெட்டியைக் கிளிக் செய்து, “Face Authentication” என்பதை அழுத்தவும். முக ஸ்கேனிங் செய்யப்படும். கணினி உங்கள் விவரங்களைப் பெற்று புதிய யுஏஎன் எண்ணை உருவாக்கும். இந்த யுஏஎன் எண் உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.

நீங்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்:

தவறான ஆதார்/மொபைல் எண் (Invalid Aadhaar/Mobile): எண்களை மீண்டும் சரிபார்த்து ஒடிபி-ஐ உள்ளிடவும்.

தோல்வி (Failure): OTP-ஐ மீண்டும் அனுப்பவும் (Resend OTP) அல்லது சரியான எண்ணை உள்ளிடவும்.

முக அங்கீகாரத் தோல்வி (Face Authentication Failure): மீண்டும் முயற்சிக்கவும் அல்லது ஆதரவு மையத்தைத் (Support) தொடர்பு கொள்ளவும்.

UAN ஏற்கனவே உள்ளது (UAN Already Exists): தகவல் திரையில் காட்டப்பட்டு, முகப்புப் பக்கத்திற்கு (Home Page) திருப்பி விடப்படும்.

ஏற்கனவே யுஏஎன் உள்ளவர்கள் உமாங் செயலியில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

யுஏஎன் எண் இருந்து, அதை இன்னும் செயல்பட வைக்காதவர்களுக்கான படிநிலைகள்:

படி 1: உமாங் செயலியைத் திறந்து ’UAN Activation’ பகுதிக்குச் செல்லவும்.

படி 2: யுஏஎன், ஆதார் எண், கைபேசி எண் ஆகிய விவரங்களை உள்ளிட்டு ஆதார் சரிபார்ப்பிற்கு ஒப்புதல் அளிக்கவும்.

படி 3: Send OTP என்பதை அழுத்தி, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் மூலம் சரிபார்க்கவும்.

படி 4: இந்திய தனித்துவ அடையாள அதிகார அமைப்பின் இடைமுகம் (UIDAI API) மூலம் முக அங்கீகாரச் (Face Authentication) செயல்பாட்டைத் தொடரவும்.

படி 5: சரிபார்ப்பு முடிந்ததும்:

  • உங்கள் யுஏஎன் ஆக்டிவேட் செய்யப்படும்.
  • யுஏஎன் மற்றும் தற்காலிகக் கடவுச்சொல் (Temporary Password) எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.
  • உங்கள் ஈபிஎஃப்ஓ தரவுத்தளத்தில் புகைப்படம் மற்றும் முகவரி புதுப்பிக்கப்படும்.

ஏற்கனவே ஆக்டிவேட் செய்யப்பட்ட யுஏஎன் கணக்கிற்கு முக அங்கீகாரம் செய்வது எப்படி?

ஏற்கனவே ஆக்டிவேட் செய்யப்பட்ட யுஏஎன் வைத்துள்ளவர்கள், பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் ஈபிஎஃப்ஓ பதிவுகளைப் புதுப்பிக்கக் கீழ்க்கண்ட படிகளைப் பின்பற்றலாம்:

படி 1: உமாங் செயலியைத் திறந்து ஏற்கனவே செயல்படும் யுஏஎன் கணக்குகளுக்கான முக அங்கீகாரம் (Face Authentication of Already Activated UANs) என்பதை அழுத்தவும்.

படி 2: ஒப்புதல் வழங்கி முக அங்கீகாரச் செயல்பாட்டைத் (Face Authentication) தொடரவும்.

படி 3: இந்திய தனித்துவ அடையாள அதிகார அமைப்பின் இடைமுகம் (UIDAI API) மூலம் அடையாளம் சரிபார்க்கப்பட்டு, யுஏஎன், ஆதார் விவரங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் பெறப்படும்.

படி 4: சரிபார்க்கப்பட்ட தகவல்களுடன் ஈபிஎஃப்ஓ பதிவுகள் தானாகவே புதுப்பிக்கப்படும்.

EPF பேலன்ஸ் சரிபார்த்தல் & பாஸ்புக் பதிவிறக்கம்:

யு.ஏ.எண் உருவாக்கப்பட்டு ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு, உறுப்பினர்கள் இ.பி.எஃப்.ஓ-வின் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி இ.பி.எஃப். பேலன்ஸைச் சரிபார்க்கலாம், பாஸ்புக்கைப் பதிவிறக்கம் செய்யலாம், க்ளெய்ம்களைக் கண்காணிக்கலாம் மற்றும் KYC போன்ற சேவைகளை நிர்வகிக்கலாம். இருப்பினும், இச்சேவைகளைப் பயன்படுத்த ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ஆதார் ஃபேஸ் ஆர்டி (Aadhaar Face RD) செயலி அவசியம்.  

உமாங் (UMANG) செயலி என்றால் என்ன?

உமாங்  என்பது இந்தியக் குடிமக்கள் அனைவரும் மத்திய அரசு முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரையிலான அனைத்து ஈ-கவர்னன்ஸ் (e-Gov) சேவைகளையும் ஒரே இடத்தில் பெற வழிவகுக்கும் தளமாகும். இந்தியாவில் மொபைல் வழியிலான ஆளுமையை (Mobile Governance) ஊக்குவிக்க மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் தேசிய மின்-ஆளுமைப் பிரிவு (NeGD) இணைந்து இச்செயலியை உருவாக்கியுள்ளன.



Source link